20042024Sat
Last update:Thu, 18 Apr 2024

இலங்கைக்கு கூடுதல் நிதியுதவி 3 ஆண்டுகளில் வழங்க திட்டம்

coldig2186541180616516 4040055 23022016 kaa cmyஜனாதிபதியிடம் ADB தலைவர் உறுதி

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடந்த ஆண்டுகளைவிட கூடுதலான உதவிகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வழங்கவுள்ளதாக அதன் தலைவர் தெக்கெஹிக்கே நக்காவோ (Takehiko Nakao) தெரிவித்தார். இலங்கைக்கு வந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்நேற்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைசந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். இலங்கையின் கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறைகளின் மேம்பாட்டுக்காக விசேட உதவிகளை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தயாரெனத் தெரிவித்த அவர், உட்கட்டமைப்பு வசதிகளுக்காக விசேட உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவ்வாறே இலங்கையை இன்று புதிய முதலீடுகளுக்கான சிறந்த மத்திய நிலையமாக தான் காண்பதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், கடந்த காலத்தில் ஒரு சில கருத்திட்டங்கள் முறையான திட்டமிடலின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக அதன் நன்மைகள் ஒரு சில பிரதேசங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக் காட்டினார்.

ஆயினும் புதிய அரசு குறுகியகாலத்துறை மற்றும் நீண்டகாலதுறை ஆகிய இரண்டு துறைகளிலும் நாட்டின் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு இத்தேசிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இன்றி தெட்டத் தெளிவாக நடவடிக்கை மேற்கொண்டு, உதவித் தொகைகளை நூற்றுக்கு நூறு வீதம் உரிய கருத்திட்டத்திற்காக பயன்படுத்துதல் புதிய அரசின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அது தொடர்பாக தான் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலத்தி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.