19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

சர்வதேச நாடுகள் எதை பின்பற்றினாலும் இலங்கைக்கு பொருத்தமான முறையில் அதிகாரப்பகிர்வு

coldsc 0030170925032 4097268 29032016 att cmyஅரசியலமைப்பின் அடிப்படை மக்களின் இறைமை: ஐ.தே.க.,சு.க.வுக்கு இரு அரசியலமைப்புகள் கிடையாது

சர்வதேச நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்திய பிரதமர், ஐ.தே.க. அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என இரண்டு அரசியலமைப்புகள் கிடையாது என்றும் அரசியலமைப்பின் அடிப்படை மக்களின் இறைமையாகும் என்றும் தெரிவித்தார். அதேபோன்று மக்கள் இறைமை என்பது வாக்குப்பலம் மற்றும் அனைவருக்கும் சமமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதையே குறிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசியலமைப்பு தொடர்பான செயலமர்வு நேற்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு இது தொடர்பில் மேலும் தெரிவித்த பிரதமர்,

எமது பாராளுமன்றத்தின் 70வது வருட நிறைவைக் கொண்டாட எமக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் நாம் கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகருடனும் கலந்துரையாடவுள்ளோம். அதேவேளை அதன் போது நாடும் நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முன்னர் நாம் கொண்டு வந்த அரசியலமைப்பை விட வித்தியாசமானதாக இம்முறை அரசியலமைப்பு அமையும்.

1943 இல் பாராளுமன்றத்தில் அரச பிரதிநிதிகள் சபை செயற்பட ஆரம்பித்தது. இலங்கைக்கு அமைச்சரவை அரசாங்க முறைமையொன்று அவசியம் என்ற தீர்மானம் அப்போதே எடுக்கப்பட்டது.

யுத்தக்காலத்தில அன்றிருந்த ஆளுநரும் பிரிட்டிஷ் அரசும் 2ம் உலக மகா யுத்தம் முடிந்த பின் இலங்கைக்கு அத்தகைய அமைச்சரவை அரசாங்க முறைமையொன்றை பெற்றுக்கொடுக்க இணங்கியதைக் குறிப்பிட முடியும்.

அந்த முறைமை ஆரம்பிக்கப்பட்ட போது அது பற்றிய அனுபவம் எமக்கில்லாமல் இருந்தது.

13வது அரசியலமைப்பே பெருமளவு கட்சிகளின் ஒத்துழைப்போடு கொண்டுவரப்பட்டது. எனினும் அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்கவில்லை. அதில் அக்கட்சி பங்கேற்றிருந்தால் 1988 தேர்தலில் அக்கட்சி பெருமளவு தொகுதிகளை வெற்றி பெற்றிருக்க முடியும். அவர்கள் அதை இல்லாதாக்கிக் கொண்டனர்.

தற்போது ஐ.தே.க. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என அனைவரும் இணைந்த செயற்பாடே இடம்பெறுகிறது. எனினும் இதில் மூன்றில் இரண்டு என்ற நிலை இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பிரதான இரு கட்சிகளும் இணைந்து தற்போது அரசாங்கம் அமைத்துள்ளது. நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த மக்கள் வழங்கிய ஆணையே அது.

மக்களின் எதிர்பார்ப்பையும் உரிமைகளையும் நிறைவேற்றுகின்ற அரசியலமைப்பே புதிய அரசியலமைப்பாகும்.

அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்புச் சபையை உருவாக்கவுள்ளோம்.

இதில் ஐ.தே.க. அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என இரண்டு சட்டமூலம் கிடையாது. எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி நாம் அதற்கான குழுவை நியமிக்கவுள்ளோம்.

இந்த குழு புதிய அரசியலமைப்பின் விடயங்கள் குறித்து தீர்மானிக்கும்.

அரசியலமைப்பின் அடிப்படை மக்களின் இறைமையாகும். இலங்கை மக்களின் இறைமை என்பது இலங்கையின் தனித்துவ அடையாளமாகும்.

நாம் அனைவரும் இலங்கையர். ஒரு தாயின் மக்கள் எமது கலாசாரத்தைப் பாதுகாத்து அதனை அனுபவிக்கும் உரிமை எம் எல்லோருக்கும் உண்டு. அதேபோன்று மக்கள் இறைமை என்பது மக்களின் வாக்குப்பலமாகும். அனைவருக்குமே சமமான உரிமை கிடைக்க வேண்டும். அதேபோன்று சட்டத்தின் ஆதிபத்தியம் நிலை நாட்டப்பட வேண்டும்.

அரசியலமைப்புக்கான மக்கள் கருத்துக்களை அறிய நாம் குழுவொன்றை நியமித்து செயற்படுத்தியுள்ளோம். அதற்கிணங்கவே நாம் செயற்படவுள்ளோம். இந்த குழுவுடன் உப குழுக்களை ஏற்படுத்துவதா அல்லது எவ்வாறு செயற்படுவது என்பதை மக்கள் கருத்தை பெற்ற பின்பே தீர்மானிப்போம். மே மாதத்தின் முதல் வாரத்தில் மேற்படி குழு தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளது.

அடுத்ததாக நாம் புதிய தேர்தல் முறை தொடர்பில் தற்போது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். தொகுதி வாரி தேர்தல் முறை மற்றும் விகிதாசார தேர்தல் முறை பற்றி பேசப்படுகிறது. விகிதாசார முறை தொடர்பில் தற்போது இணக்கம் காணப்பட்டு வருகிறது. தொகுதிவாரியாகப் பார்க்கையில் தொகுதிக்கு 50 வீதமா அல்லது 60 வீதமா என்பது பற்றியும் தேசிய பட்டியல் பற்றியும் முடிவெடுக்க வேண்டியுள்ளது.

எவரும் தமது கட்சியை இல்லாதொழிப்பதற்காக பாராளுமன்றத்திற்கு வரவில்லை. தமது கட்சியைப் பலப்படுத்துவதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

பாராளுமன்றம் மற்றும் நிவைற்று அதிகாரத்தை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பில் பார்க்க வேண்டியுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் அதிகாரங்களை வழங்கவும் தாம் தயார் என குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அரசியலமைப்பு சபையிலேயே முடிவெடுக்கப்படும்.

அடுத்து அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. நாட்டுக்குப் பாதிப்பில்லாமல் அதிகாரங்களைப் பகிர்வது முக்கியமாகும்.

அதிகாரத்தைப் பகிர்வது மற்றும் விஸ்தரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படும். பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை அரசாங்கமாக்கும் செயற்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும். தெரிவுக்குழுவில் சகல கடசிகள் மற்றும் குழுக்களுக்கும் இடமளிக்கப்படும் அமெரிக்கன் முறையோ அல்லது வேறு முறையோ இல்லாது பௌத்த கோட்பாட்டிற்கிணங்க அமைவது அனைவருக்கும் பொருத்தமானதாகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.