29032024Fri
Last update:Mon, 04 Mar 2024

இந்திய தூதுக் குழுவுடன் பேசிய பின்பே ஒப்பந்தம் இறுதி வடிவம்

Ranil 1172416050 4040015 23022016 att cmyஇந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்த வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படஇருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதில் வெளிநாட்டவர் தொழில்புரிய இடமளிக்கும் சேவைத்துறை விடயம் நீக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மார்ச் 4ஆம் திகதி இங்குவரும் இந்திய தூதுக்குழுவுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதி வரைபு தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இரகசியமாக எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்த அவர் இறுதி ஒப்பந்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சகல தரப்பினரினதும் கருத்துக்கள் பெறப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை வெ ளியிட்ட அவர், மேலும் குறிப்பிட்டதாவது,

பத்து இலட்சம் தொழிவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக எமது சந்தை வாய்ப்புக்களை விஸ்தரிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள மத்தியதரப்பினரை இலக்குவைத்து எமது உற்பத்தி சந்தையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். ஐரோப்பா, இந்தியா, சீனா, சிங்கப்பூர், துருக்கி போன்ற நாடுகளில் உள்ள சுமார் ஒரு பில்லியன் கொண்ட மத்தியதரப்பினருக்கு எமது உற்பத்திகள் சென்றடைய திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக, தொழில்நுட்ப துறைசார் ஒப்பந்தங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம்.

ஜீ.எஸ்.பி பிளஸ் ஊடாக ஐரோப்பாவில் உள்ள 50 கோடி சனத்தொகை மத்தியில் எமது வர்த்தக சந்தையை விஸ்தரிக்க அவகாசம் ஏற்பட்டது. மோசடி ராஜபக்ஷ ஆட்சியினால் இந்த நிவாரணத்தை இழக்க நேரிட்டது. மீன்பிடித் ஏற்றுமதி தொடர்பிலும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிவாரணங்களை மீளப்பெற நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம். எமது கொள்கைகளை முன்னெடுப்பதற்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.

அதனால் எவருக்கும் இந்த மக்கள் ஆணைக்கு எதிராக செயற்பட முடியாது. துரோகிகளே இதற்கு எதிராக செயற்படுவார்கள். எமக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் ஐரோப்பிய சந்தைக்குள் நுழையவும் இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

சீனா, சிங்கப்பூர், துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு பேச்சு நடத்தி வருகிறோம். உலகில் எந்தவொரு பொருளுக்கும் தொழில்முயற்சியாளருக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. நாம் எமது உற்பத்திகளைப் போட்டித் தன்மையுடன் முன்னேற்ற வேண்டும்.

உலகில் பல்வேறு நாடுகளுடன் நாம் மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தம் குறித்து எவரும் அஞ்சத்தேவையில்லை. நாட்டின் நலன் கருதியே நாம் இவற்றை மேற்கொள்கிறோம். தொடர்ந்தும் நாம் கிணற்றுத் தவளைகள் போல் இருக்கத் தேவையில்லை.

வேகமாக முன்னேறிவரும் உலகத்துடன் நாமும் முன்னேற வேண்டும். உலக சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் எம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். உலக சந்தையை வெற்றி கொள்வதற்காக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவிருக்கிறோம். இந்தியாவுடன் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தம் குறித்து சில தரப்பினர் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இதுவரை வரைபொன்று தயாரிக்கப்படாத பேச்சுவார்த்தை மட்டத்தில் உள்ள விடயமொன்று குறித்து எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் சுதந்திர பொருளாதார ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனூடாக எதிர்பார்த்த பலனை அடையமுடியாததால் கடந்த அரசாங்கம் சீபா ஒப்பந்தத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டது. ஆனால் இதில் சேவைத்துறை உள்ளடக்கப்பட்டிருந்ததால் நாம் அதனை எதிர்த்தோம். ஜனவரி எட்டாம் திகதியின் பின்னர் உருவான புதிய அரசாங்கம் சீபா ஒப்பந்தம் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியது. இந்தியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீபா ஒப்பந்தத்தை கைவிட்டு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

2016ஆம் ஆண்டு நடுப் பகுதியில் இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட உடன்பாடு காணப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் நாம் வரைபொன்றை தயாரித்து வருகிறோம். இந்தியத் தரப்பு வரைபும் தயாரான பின்னர் இறுதி ஒப்பந்தத்தை தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த ஒப்பந்தம் சீபா ஒப்பந்தத்தை விட சிறந்ததாக அமையும். கடந்த காலத்தில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு வரிச்சலுகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. புதிய ஒப்பந்தத்தின் ஊடாக சகல பாதகமான விடயங்களையும் மாற்ற எதிர்பார்க்கிறோம். சீபா ஒப்பந்தத்தில் இருந்த சுதந்திரமான பயண அனுமதி புதிய ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இதனூடா எந்த வெளிநாட்டுப் பிரஜைக்கும் இலங்கையில் தொழில்புரிய இடமளிக்கப்படமாட்டாது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையருக்கு கூடுதல் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். தற்பொழுது கிடைப்பதைவிட கூடுதலான சம்பளம் கிடைக்கும். இலங்கைக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் தொகையை அதிகரிப்பது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதற்கு சாதகமான பதில் கிடைத்து வருகிறது.

புதிய ஒப்பந்தத்தின் ஊடாக சிறு மற்றும் மத்தியதர கைத்தொழில் ஊக்குவிப்பு, வர்த்தகம், சுங்கம் சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தக மேம்பாடு, நிதி போன்ற பல்வேறு துறைகள் உள்வாங்கப்படவிருக்கின்றன.

எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி இந்தியத் தூதுக்குழு இலங்கைக்கு வரவிருக்கிறது. அவர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இறுதி வரைபு தயாரிக்கப்படும். புதிய ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தை அறிவூட்டவிருக்கிறோம். பிறக்காத குழந்தையின் ஜாதகத்தை குறைகூறுவது நியாயமல்ல. தாம் கற்பனையாக உருவாக்கிக் கொண்ட பிசாசைக் காண்பித்து மக்களை ஏமாற்றுவது உகந்ததல்ல. ராஜயோகம் உள்ள குழந்தையையே நாம் பிரசவிக்கவுள்ளோம்.

ராஜபக்ஷ ஆட்சியில் அவர்களின் அடியாட்களாக, அடிமைகளாக செயற்பட்டு இன்றும் அவர்களிடமிருந்து சம்பளம் வாங்கும் சில ஊடகவியலாளர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்தைக் குழப்ப முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காலில்பிடித்து இழுக்கப் பார்க்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் புதிய அரசியலமைப்பொன்று அவசியம் எனக் கூறுகையில் பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டைத் தீவைக்க முயல்கிறார்கள். ஒரு சரத்துக் கூட தயாரிக்கப்படாத அரசியலமைப்பு குறித்தே இவ்வாறு பொய் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. பொய்யை பரப்பி குரோதத்தை வளர்த்து மக்களை தவறாக வழிநடத்த நாம் யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை.

குரங்கிற்குத் தேவையானவாறு குரங்காட்டம் இடம்பெறுவதில்லை. எவருக்கும் அனுமானைப் போன்று ஆடுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அனுமான்களுக்கு நாட்டைத் தீவைக்க இடமளிக்க முடியாது. நாட்டில் பற்றியெரியும் தீயை அணைப்பதற்கே நாம் ஆட்சிக்கு வந்தோம்.

இந்த வருட நடுப்பகுதியில் இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். விரைவில் இறுதி வரைபு தயாரிக்கப்படும். இதனை நாம் திருட்டுத் தரமாக செய்ய மாட்டோம். சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வெ ளிப்படைத் தன்மையுடனேயே இதனை முன்னெடுப்போம்.

இறுதி ஒப்பந்த வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மக்கள் பார்வையிடக்கூடிய பொதுவான ஆவணமாக அமையும். இந்த ஆவணத்தை ஆராய்ந்து எங்கள் கருத்துக்களை முன்வைக்குமாறு கோருகிறோம் என்றார்.