18042024Thu
Last update:Mon, 04 Mar 2024

அந்தோனியார் திருவிழா; இருநாட்டவரும் பங்கேற்பு

11col11144708248 4035461 21022016 att cmyகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 21ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து 7853 பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கச்சதீவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 94 வள்ளங்களில் 3248 பேரும் இலங்கையிலிருந்து 203 படகுகளில் 4605 பேரும் கச்சதீவுக்கு வருகை தந்திருந்தனர். அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 300 மதகுருமார்களும் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறையே அதிகூடிய பக்தர்கள் கலந்து கொண்டதாக இலங்கை கடற்படை, மற்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகியதுடன் மாலை சிலுவைப்பாதையும் இடம்பெற்றது. அத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை 21ஆம் திகதி காலை சிறப்பு திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்றதுடன் கொடி இறக்கமும் இடம்பெற்றது.

கடற்படையின் அதிவேக படகான டோராவின் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவுக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் உட்பட விஷேட பிரமுகர்கள் அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் திருப்பலி பூஜை இடம்பெற்றது. இலங்கை சார்பில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நெடுந்தீவு பங்கு தந்தையும் இந்தியாவின் சார்பில் இராமேஸ்வரம் பங்குத் தந்தை அருட்திரு சகாயராஜ் அடிகளாரும் திருப்பலி பூஜையை நடத்தினர்.

யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் வழிகாட்டலில் இலங்கை கடற் படையினரின் பூரண உதவியுடனும் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த வருடாந்த திருவிழாவில் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ. பத்திநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, வட பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பியால் த சில்வா, இந்திய துணைத் தூதுவர் வை. கே. நடராஜ் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மீனவ மக்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய, கடலுக்கு அதிபதியாக விளங்கும் புனித அந்தோனியார் தேவாலயம் என கிறிஸ்தவர்களினால் போற்றப்படுகின்ற கச்சதீவு திருவிழாவிற்கு இம்முறை இலங்கையைச் சேர்ந்த பக்தர்களே அதிகம் கலந்து கொண்டிருந்தனர். இவர்களில் தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள பக்தர்கள் இம்முறை கலந்து கொண்டதை காணக் கூடியதாக இருந்தது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் சர்வதேச கடல் எல்லை வரை அழைத்துவரப்பட்டதுடன் அங்கிருந்து கச்சதீவு வரை இலங்கை கடற்படையின் வழித்துணையுடனும் அழைத்துவரப்பட்டனர். இதேவேளை, கச்சதீவு வருடாந்த திருவிழா நிகழ்வில் பங்குகொள்ள வருகைதரும் விஷேட பிரமுகர்களுக்கான கடல் போக்குவரத்து வசதிகளையும் இலங்கை கடற்படையினர் திட்டமிட்ட அடிப்படையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகள், மலசலகூட வசதிகள், தற்காலிக தங்குமிட, மின்சார விநியோக வசதிகள் மற்றும் வருகைதரும் படகுகளை நிறுத்துவதற்கான தற்காலிக இறங்குதுறை போன்ற வசதிகளையும் இலங்கை கடற்படையினர் வழங்கியிருந்தனர்.

திருவிழாவிற்கு வருகைதந்த பக்தர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அதேசமயம் தேவையின் நிமிர்த்தம் கடற்படையின் மருத்துவ மற்றும் உயிர்க்காப்பு பிரிவினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் தற்காலிக கூடாரங்களில் கச்சதீவு பொலிஸ் நிலையம், நீதிமன்றம், இந்திய வங்கி மற்றும் இலங்கை வங்கி என்பன அமைக்கப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் புடைவை மற்றும் பல்பொருள் வியாபாரிகளும் வருகை தந்திருந்ததால் பக்தர்களின் நலனை கருத்திற் கொண்டு 24 மணி நேரமும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து பல மணிநேர கடல்வழி பயணத்தை மேற்கொண்டு கசச்தீவுக்கு வருகை தந்த பக்தர்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றதுடன் மூன்று வேளை உணவு கடற்படையினரால் இலவசமாக வழங்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயமும் இதற்கான பங்களிப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இராமேஸ்வரம், திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 150 இற்கும் அதிகமான அருட் சகோதரிகளும் அருட் தந்தைகளும் இலங்கையிலிருந்தும் அதிகமான அருட் தந்தையர்கள் ,சகோதரிகள் வருகை தந்திருந்தனர். இவர்கள் தங்குவதற்கு தனித்தனியான தற்காலிக கொட்டில்கள் வழங்கப்பட்டிருந்தன.

இம்முறை இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமையும் விஷேட அம்சமாகும். இவர்கள் கடற்படையின் மூன்று டோராக்கள் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கச்சதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் இலங்கை அரசு மற்றும் இலங்கை கடற்படையினரின் திருவிழா மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் விஷேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் நிருவகிக்கப்பட்டு வருகின்ற இந்த கச்சதீவு, சுமார் 285 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பகுதியாகும்.

காங்கேசன்துறையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவிலும் (70 கிலோ மீற்றர்) நெடுந்தீவிலிருந்து சுமார் 10.3 கடல் மைல் தொலைவிலும் (18.54 கிலோ மீற்றர்) சர்வதேச கடல் எல்லையிலிருந்து ஒரு கடல் மைல் தொலைவிலும் (1.8 கிலோ மீற்றர்) இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து 12.5 கடல் மைல் தொலைவிலுமே இந்தத் தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.