03052024Fri
Last update:Thu, 18 Apr 2024

ஜூனுக்கு முன் தேர்தல்; ஏப்ரலுக்குள் எல்லை

index 19012016 kaa cmyஎல்லை நிர்ணய செயற்பாடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பூர்த்தி செய்து ஜூன் மாதத்துக்கு முன்னர் உள்ளூ ராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்துக்கு அமையவே தேர்தல் நடத்தப்படும். எனினும் தமது அரசியல் சுயலாபத்துக்காக நீதிமன்றத்துக்குச் சென்று பழைய தேர்தல் முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சிலர் பிரசாரங்களை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். எல்லைநிர்ணய செயற்பாடுகள் தாமதமடைந்தமைக்கு தானோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கமோ காரணமல்ல எனக் குறிப்பிட்ட அமைச்சர், தொகுதிவாரி மற்றும் விகிதாசாரத்தை உள்ளடக்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார்.

எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் மேன்முறையீடுகள் குறித்து, மேன்முறையீட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை ஏப்ரல் மாத்துக்கு முன்னர் பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் எல்லை நிர்ணயத்தை பூர்த்தி செய்து, ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் நீதிமன்றத்துக்குச் சென்று பழைய முறையின் கீழ் தேர்தலை நடத்தவிருப்பதாக சிலர் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்க முடியாது. தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம், முறையான செயற்றிட்டமொன்றை தயாரிக்காமல் உள்ளூராட்சி சபைகளைத் தரமுயர்த்தப் போவதில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், 43 உள்ளூராட்சி சபைகளை தரமுயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். கடந்த காலங்களில் எதுவித பொதுச் செயற்றிட்டமும் இன்றி உள்ளூராட்சி சபைகள் தரமுயர்த்தப்பட்டன. இதனால் பல்வேறு எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் பொதுவான செயற்றிட்டமொன்றைத் தயாரித்த பின்னரே தரமுயர்த்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எல்லை நிர்ணயம் தொடர்பாக கிடைத்திருக்கும் மேன்முறையீடுகள் குறித்து மாவட்ட ரீதியில் ஆராயப்படுவதாக எல்லை நிர்ணய சபையின் தலைவர் அசோக்க பீரிஸ் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணையாளரின் முன்னைய அறிக்கை, கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினரின் கருத்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கி எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.