29042024Mon
Last update:Thu, 18 Apr 2024

கட்சிகள், வேட்பாளர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல்

* வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கக் கட்டுப்பாடு

* வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் அலுவலகம் திறக்க அனுமதி

* துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க பொலிஸ் பாதுகாப்பு

tkn MAHINDA DESAPIRIYA ndk 02போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் தேர்தல் அலுவலகமொன்றை அமைப்பதற்கு தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

 அத்துடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது 15 முதல் 25 பேர் வரையில் மட்டுமே செல்ல வேண்டுமென்றும் தேர்தல் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். பகிரங்க இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தல் விடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் நேற்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் செயலகத்தில் சந்தித்து உரையாடிய போதே மேற்கண்டவற்றை கூறியுள்ளார். விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் அனைத்தும் சட்ட ரீதியாக இருக்க வேண்டும் அச்சிட்டவர் மற்றும் அச்சகம் ஆகியவற்றின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படும் போது எவ்வித பிரச்சினையும் ஏற்படுத்தப்படக் கூடாது. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்படும் இடத்திலிருந்து சற்று தொலைவில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறக் கூடாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடக்கூடாது என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கட்சிப் பிரதிநிதிகள் இச்சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன் பிரசாரங்களுக்கு வழங்கப் பட்டுள்ள நேர காலம் போதாது என்று சுட்டிக்காட்டிய கட்சிப் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை யினை அதிகரித்து தருமாறும் கேட்டுக் கொண்டனர்.

வேட்பாளர்கள் அல்லது அவரது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வாக்கு கேட்டுச் செல்லக்கூடாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் வலியுறுத்தினார்.

கூட்டிணைந்து போட்டியிடும் சிறு அரசியல்கட்சிகள் தேர்தல்கள் ஆணை யாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் வேட்பாளரின் வீடு ஆகியவற்றுக்கு மேலதிகமாக தேர்தல் அலுவலகம் அமைக்க முடியுமென்றும் ஆணையாளர் தெரிவித்தார்.

அந்த அலுவலகங்களில் வேட்பாளரின் பெயர், விருப்பு இலக்கம், பாரியளவிலான கட் அவுட் வைப்பதற்கும் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார். வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கட்சிகளின் பிரதிநிதிகளை அனுமதிப்பதற்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமிருப் பதாகவும் அவர் கூறினார்.