28032024Thu
Last update:Mon, 04 Mar 2024

பிறக்கும் புத்தாண்டில் சகல இன மக்களுக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும் கிடைக்கட்டும்

Presidentதாய்நாட்டை சுபீட்சத்தினை நோக்கி இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இச்சந்தர்ப்பத்தில் அந்த நோக்கத்தை அடைவதற்கு புத்தாண்டு பண்டிகை உந்துதலளிப் பதாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித் துள்ளார். ஜனாதிபதி தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

எல்லா இலங்கையர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

சூரியன் மீன இராசியிலிருந்து மேச இராசிக்கு மாறும் சுபவேளையில் இயற்கையின் புதிய வசந்தகால புத்தெழுச்சியுடன் உதயமாகும் சிங்கள தமிழ் புத்தாண்டு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கொண்டு வருகிறது.

எமது மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் சமய, கலாசார பாரம்பரியங்களுக்கும்

சிறந்த சமூகப் பெறுமானங்களுக்கும் முக்கியத்துவமளித்து, எமது வாழ்வை வளப்படுத்திய தொன்மைமிக்க மானிடப் பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கின்றனர். இப்பெறுமானங்களில் மக்கள் மத்தியில் ஐக்கியம், சமாதானம், பகிர்தல் உணர்வு மற்றும் அனைவர் மீதும் நல்லெண்ணம் கொள்தல் என்பன சிறப்பு வாய்ந்தவையா கும்.

இன, மத, சாதி வேறுபாடுகளின்றி நல்லாட்சிக்கான அர்ப்பணத்துடன், எமது நாட்டில் வாழும் எல்லா இனங்களுக்கு மத்தியிலும் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் முக்கிய முன்னேற்றப்படிகளுக்கு மத்தியில் இவ்வருட புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறவது விசேடமானதாகும்.

பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில், எமது தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசமாக நாம் எழுந்திருந்தமை வரலாறு நெடுகிலும் எம்மிடமிருந்த மிகப்பெரும் பலம் என்பதை புரிந்து கொள்வதற்கான தருணம் இதுவாகும். அதேபோன்று இன்றும் நாம் இன வேறுபாடுகளின்றி இலங்கையர்களாக ஒன்றிணைந்து புத்தாண்டைக் கொண்டாடுவதும் உறவினர்களை சந்திக்கச் செல்தல் போன்ற புத்தாண்டுப் பாரம்பரியங்களில் பங்குபற்றுவதும் எல்லோர் மத்தியிலும் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்த உதவும்.

எமது தேசத்தின் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்த மனதுடனும் ஒரே நோக்குடனும் எமது தாய்நாட்டை சுபீட்சத்தின் பால் இட்டுச் செல்வதற்கு பெறுமதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள ஒரு சந்தர்ப்பத்தில், இந்தத் தேசிய கலாசார பண்டிகை அந்த நோக்கத்தை அடைந்து கொள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பத்தைத் தருகிறது. இப்புத்தாண்டுக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் நாம் எல் லோரும் ஐக்கியத்துடன் ஒன்றிணைவோம்.

இப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மதுபானம், புகையிலைப் பாவனையிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ளுமாறு உங்களை கேட்டுக் கொள்வதோடு, பிறந்திருக்கும் இந்த சிங்கள தமிழ் புத்தாண்டு எல்லா இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சியையும் சுபீட்சத்தையும் கொண்டுவர பிரார்த்திக்கின்றேன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.