26042024Fri
Last update:Thu, 18 Apr 2024

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் நேற்று காலமானார்

12ம் திகதி தேசிய துக்கதினம்

Monk2அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர் தனது 86 வயதில் நேற்று (08) காலை காலமானார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத் திரியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே நேற்றுக் காலை மஹா நாயக்கர் காலமாகியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் நாயகம் வண. ஆனமடுவ தர்மதஸ்ஸி தேரர் உத்தியோகபூர்வமாக இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் காலம் சென்றுள்ள அதி வணக்கத்துக்குரிய பீடாதிபதியின் பூதவுடல் கொழும்பிலிருந்து இன்று (09) காலை 7.00 மணிக்கு கண்டியிலுள்ள அஸ்கிரிய விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனைத் தொடர்ந்து அன்னாரினது பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று 12.00 மணியிலிருந்து அஸ்கிரிய விஹாரையில் வைக்கப்படும்.

1930 பங்குனி மாதம் 17 ஆம் திகதி குருநாகல் மாவட்டத்திலுள்ள தம்பதெனிய உடுகம பிரதேசத்தில் பிறந்த இவர் 1945 ஆம் ஆண்டு முதல் பெளத்த தேரராக பதவியேற்று அஸ்கிரிய விஹாரையில் தமது கடமைகளை முன்னெடுத்து வந்துள்ளார். அதி வணக்கத்துக்குரிய பீடாதிபதி 1998 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை அஸ்கிரிய பீடாதிபதியாக கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பூரண அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள்

காலம் சென்ற அஸ்கிரிய பீடத்தின் மஹா நாயக்க அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரினது இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதைகளுடன் எதிர்வரும் 12ம் திகதி (ஞாயிறு) பி.பகல் 2.00 மணியளவில் கண்டியிலுள்ள அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் அதி வண. மஹாநாயக்க தேரரின் இறுதிகிரியைகளை பூரண அரச மரியாதையுடன் மேற்கொள்ளும் படியான உத்தரவொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெளத்த மத விவகார நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகத்திற்கு பணித்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் வண. நாரங்பனாவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மேலும் அன்னாரினது மறைவுக்கு மரியாதை செய்யும் முகமாக கண்டியிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிலையங்களில் மஞ்சள் நிற கொடியை பறக்க விடுமாறும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கேட்டுள்ளார்.