28032024Thu
Last update:Mon, 04 Mar 2024

தனியார் துறையினருக்கு விரைவில் சம்பள உயர்வு

* பாலுக்கு உத்தரவாத விலை

* கூடுதல் நிவாரணங்கள் விரைவில்

* மே முதல் புலமைப் பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு- பிரதமர்

Wickremsinghe IIமஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 2/3 பெரும்பான்மையுடன் 10 வருடங்களில் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் மேற்கொள்ள முடிந்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய எஞ்சிய வாக்குறுதி களையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர், மக்களுக்கு மேலும் நிவாரணங்கள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்த அவர் மேலும் கூறியதாவது,

 கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக 100 நாள் திட்டமொன்றை மக்களுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற உடன் 100 நாள் திட்டத்தை துரிதமாக அமுல்படுத்த ஆரம்பித்தோம். ஜனநாயகம் நசுக்கப்பட்ட சமூகத்திலே எமக்கு இதனை மேற்கொள்ள நேரிட்டது.

நாம் இந்த சவாலை ஏற்று அதற்கு முகம் கொடுத்தோம். மைத்திரி ஆட்சியில் 88 நாட்கள் கடந்து விட்டன. இந்த 88 நாட்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து எம்மால் திருப்தி அடைய முடியும். 100 நாள் திட்டத்தின் கீழ் மக்களுக்கு பல நிவாரணங்கள் வழங்குவதாக நாம் உறுதியளித்தோம். அதன் பிரகாரம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 3500 ரூபா இடைக் கால கொடுப்பனவு வழங்கினோம். எரிபொருள் விலையை குறைத்தோம். சமுர்த்தி கொடுப்பனவு அதிகரிக்கப் பட்டது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான போசாக்கு பொதிகள் வழங்க ஆரம்பித்துள்ளோம். பொருட் களின் விலைகள் குறைக்கப்பட்டன. சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டது. நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்கியிருக்கிறோம். தேயிலை, இறப்பர் என்பவற்றுக்கு கூடுதல் விலை வழங்கப்பட்டுள்ளன.

பால் லீட்டருக்கான விலையை மே மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தரமற்ற பசளை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. இலவசமாக வைபை (wifi)வழங்கும் வலயங்களை ஆரம்பித்திருக்கிறோம். ரீலோடுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை அதிகரித்துள்ளோம்.

அடகு வைக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுக்கான வட்டி இம்மாதம் முதல் ரத்துச் செய்யப்படும். மகாபொல புலமைப் பரிசில் தொகை மே மாதம் முதல் 5 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படும். இவ்வாறாக நாம் பல நிவாரணங்கள் வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் மேலும் நிவாரணங்கள் வழங்க இருக்கிறோம். விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், அரச, தனியார் துறை ஊழியர்கள் அடங்கலாக சகல துறைகளிலும் உள்ள நபர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

தனியார் துறையினரின் சம்பள உயர்வு தொடர்பாக சம்பள நிர்ணய சபைகளுடன் பேசி வருகிறோம். இதன் பிரகாரம் விரைவில் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். சம்பள நிர்ணய சபைகளின் கீழ் உள்ளடங்காத தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுதந்திரக் கட்சி அமைச்சரான எஸ்.பி. நாவின்ன அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமலே இவற்றை மேற்கொண்டோம். ராஜபக்ஷ ஆட்சியில் ஏதாவது நிவாரணம் வழங்கப்படுமானால் அது வரிச்சுமை ஏற்றியே வழங்கப்பட்டது. அந்த முறையை நாம் மாற்றியுள்ளோம். அதனால் மக்களின் கைகளில் அதிகமாக பணம் புழங்குகிறது. வாழ்க்கைச் செலவு குறைந்துள்ளது. கடந்த காலத்தை போலன்றி முதல் தடவையாக வாழ்க்கைச் செலவுப்புள்ளி வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. இது மைத்திரி ஆட்சியில் நடந்த முக்கிய வெற்றியாகும்.

100 நாள் திட்டத்தின் கீழ் பல புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்பட்டுள்ளன. 19 ஆவது திருத்தச் சட்டம் அவற்றில் பிரதானமானதாகும். தேர்தல் மறுசீரமைப்பிற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆரம்ப இணக் கப்பாட்டிற்கு தேசிய நிறைவேற்று சபை வந்துள்ளது. இந்த இணக்கப்பாட்டின் படி தெரிவுக்குழு ஒன்றினூடாக தேர்தல் சட்டமூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். துரிதமாக மேற்கொள்ள வேண்டிய பணியாகவே இதனை கருதுகிறோம்.

தேசிய ஒளடத சட்டம் நிறை வேற்றப்பட்டது. கெசினோ அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத் தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தகவலறியும் சட்டம், கணக்காய்வு சட்டம் என்பவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். மோசடி, ஊழல் குறித்து ஆராய்வதற்காக லஞ்ச ஊழல், ஆணைக்குழுவை பலப்படுத்தி வருகிறோம். பாரிய மோசடிகள் குறித்து ஆராய அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. தராதரம் பாராது மோசடி குறித்து ஆராய்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிராணி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு நியாயத்தை நிலைநாட்டி உரிய கெளரவத்தை வழங்கியிருக்கிறோம்.எமக்கெதிராக சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை மீளப்பெறவும் ஐரோப்பிய தடையை நீக்கவும் தேவையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

சர்வதேச மட்டத்தில் எமக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் நிவாரணங்களை மீள நாட்டுக்கு பெறவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.மனித உரிமையை நசுக்கி நினைத்த வாறு மக்களை கடத்தி, எதிர்த்தரப் பினரை கொலை செய்த மோசடி நாடாக குற்றஞ்சாட்டப்பட்ட எமது நாடு ஆசி யாவில் சிறந்த நாடு என்ற நற்பெயரை பெற்று வருகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக கிளிநொச்சியில் தேசிய மத்திய நிலையமொன்றை அமைக்க எதிர்பார்க்கிறோம். நாடுமுழுவதும் சுதந்திரமான சூழல் உருவாகியுள்ளதாக மல்வத்த அஸ்கிரிய, பீடாதிபதிகளும் யாழ். ஆயரும் தெரிவித்துள்ளனர். வீதியில் இறங்கி போராடினால் துன்புறுத்தப்படுவர் வீதி எங்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் கட் அவுட்களே இருக்கும். ஆனால் இன்று அந்த நிலை கிடையாது.

பத்திரிகையை கையிலெடுத்தால் இந்த சுதந்திரத்தை உணரலாம். என்னையும் ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்றவர் களையும் விமர்சிக்கின்றனர். கருத்து வெளியிடவும் விமர்சிக்கவும் இப்போது சுதந்திரம் காணப்படுகிறது. யாரும் வேவுபார்க்கப்படுவது கிடை யாது. அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் பற்றிய கோப்புகள் (File) திரட்டப் படுவதில்லை. கோப்புகளை காட்டி எம்.பிகளை பொம்மை போல் ஆட்டுவிக்க மாட்டோம்.

100 நாள் திட்டத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இந்த சுதந்திரமாகும். பேஸ் புக்கில் ரணில் விக்ரம சிங்கவை கொலை செய் என ஒருவர் எழுதியிருக் கிறார். கடந்த அரச தலைவர்களுக்கு இவ்வாறு எழுதியிருந்தால் என்ன நடந்திருக்கும். 100 நாள் திட்டத்தில் வாக்களித்த அநேக வாக்குறுதிகளை நிறைவேற் றியிருக்கிறோம். எஞ்சியவற்றையும் துரிதமாக செய்வோம். 2005 மஹிந்த சிந்தனையில் வாக்களித்தவற்றில் 10 வீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.

மஹிந்த ஆட்சியில் 10 வருடங்களாக நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாட்களில் நிறைவேற்றியுள்ளோம். 2/3 பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற முடியாதவற்றை 88 நாளில் சாதித்திருக்கிறோம். இது இலங்கை அரசியல் வரலாற்றில் தலை சிறந்த சாதனையாகும். பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்று வோம். எமது நாட்டை சிறந்த, பண்பான, ஒழுக்கம் நிறைந்த நாடாக மாற்றுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எமது தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவோம். 100 நாள் பூர்த்தியடைந்த பின்னரும் எமது முன்னேற்ற அறிக்கையை வெளியிட இருக்கிறோம்.