அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

harsha 23062016 kaaகடந்தகால அசௌகரியங்கள் குறித்து அரசாங்கம் கவலை

வெளிநாடுகளில் புகலிடம் அல்லது அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்தது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரையின் கீழ் அவ்வாறானவர்களுக்கான கொன்சியூலர் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலைமை மாற்றப்பட்டிருப்பதுடன், கடந்த காலத்தில் ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை அடைவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மொழி மூல விடைக்காக எஸ்.எம்.மரிக்கார் எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் இதனைக் கூறினார். அகதிகளாக வெளிநாடுகளில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள இலங்கையர்கள், இலங்கையர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனரா? அவர்களுக்கு கொன்சியூலர் சேவை பெற்றுக் கொடுக்கப்படுகிறதா என மரிக்கார் எம்பி தனது கேள்வியில் கேட்டிருந்தார்.

வெளிநாடுகளில் புகலிடம் கோரி அல்லது அகதி அந்தஸ்துகோரி நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கென்சியூலர் சேவையப் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு எந்தத் தடையும் இல்லை. இது தொடர்பில் முன்னர் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சட்டம் மீளவும் நடைமுறைப் படத்தப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் பணிப்பின் கீழேயே இந்த சட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து கவலையடைகிறோம் எனத் தெரிவித்தார்.

அதேநேரம், உயிர் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருந்த ஊடகவியலாளர்களுக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் கொன்சியூலர் சேவைகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊடகத்துறை அமைச்சு விசேட ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என மரிக்கார் எம்பி கோரிக்கை விடுத்தார்.