எதிர்வரும் போகத்தில் நெல் கொள்வனவுக்கு நாடு பூராகவும் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு

Presidential Media Unit Common Banner 1எதிர்வரும் போகத்தில் தாமதமின்றி நெல் கொள்வனவை மேற்கொள்ளும்வகையில் நாடு பூராகவும் களஞ்சிய வசதிகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று (14) முற்பகல் பொலன்னறுவை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இப் பணிப்புரையினை விடுத்தார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் களஞ்சியசாலை வசதிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள்பற்றிய அறிக்கையினை துரிதமாக தன்னிடம் ஒப்படைக்குமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், தற்காலிக களஞ்சியசாலைகளை நிர்மாணித்து எதிர்வரும் போகத்தில் சிக்கலின்றி நெல் கொள்வனவு செய்வதற்கு ஆயுத்தமாகுமாறு ஆலோசனை வழங்கினார்.

மணல், கற்கல் மற்றும் மண் போக்குவரத்து தொடர்பில் ஒரு சிலர் அரசு மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இவற்றைப் போக்குவரத்து செய்வதற்கான அனுமதிகள் நிறுத்தப்படவில்லை எனவும் புதிய சுற்றறிக்கைகளின்கீழ் இறுக்கமான சட்டவிதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி கருத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2016ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள கருத்திட்டங்கள் ஆகியன தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்காக மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை மீளத் திருப்பி அனுப்பாது உரியவாறு மக்களது தேவைப்பாடுகளுக்காக பயன்படுத்துவது உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் இங்கு வலியுறுத்தினார்.

எதிர்வரும் மூன்றாண்டு காலத்திற்குள் பொலன்னறுவை மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் பொலன்னறுவை மாவட்டத்தின் 114 கல்விக் கருத்திட்டங்கள், 2 சுகாதாரக் கருத்திட்டங்கள், 12 கமனல சேவை கருத்திட்டங்கள், 8 மகாவலி கருத்திட்டங்கள் மற்றும் ஒரு வனப் பாதுகாப்பு கருத்திட்டம், 2 மதக் கருத்திட்டங்கள் மட்டுன்றி 11 பொது வசதிகள் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுதப்பட்டுள்ளன.

இவற்றின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் இதன்போது உத்தியோகத்தர்களிடம் விரிவாக விடயங்களை கேட்டறிந்தார்.

உர நிவாரணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், உரத்தினை 350 ரூபாவுக்கு பெற்றுத் தருமாறு ஒருசிலர் போராட்டம் மேற்கொண்டதாகவும் புதிய அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

போதிய விளக்கமின்மை மற்றும் ஒரு சில அரசியல்வாதிகளின் தேவைக்காக ஒருசில நிகழ்வுகள் இடம்பெறும்போதும் அரசின் வேலைத்திட்டம் தொடர்பாக விவசாயிகளை அறிவூட்டுதல் மிக முக்கியமானதாகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து, துப்பரவேற்பாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டுத்துறைக்கான வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தின் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை துரிதமாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கினார்.

பொலன்னறுவை, ஹிங்குரக்கொட, வெலிக்கந்த புதிய பேருந்து நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட மாவட்டத்தின் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பொலன்னறுவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றை நிர்மாணித்தல் தொடர்பாகவும் ஹிங்குரக்கொட உள்ளக விமான நிலையத்தை புதுப்பித்தல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், நிமல் சிறிபால த சில்வா, தயாசிறி ஜயசேகர, பி.ஹெரிசன், வடமத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன, பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாந்து, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத், சிட்னி ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட மாகாணத்தின் அரசியல் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் திரு.பி.பீ.அபேகோன், பாதுகாப்பு செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.