மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

12804637 909071805870596 5250910473421928971 n 10032016 kaaமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் நேற்று தனது 83 வது வயதில் லண்டனில் காலமானார்.

லண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் நேற்றுமுன்தினம் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலமானார்.

தமிழரசுக்கட்சியில் முக்கிய தலை வராக இருந்து அமிர்தலிங்கம் செயற்பட்டு வந்த காலம் முதல் அவரின் அரசியல் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டி அவருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் மங்கையற்கரசி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் மகளிர் பிரிவு தலைவியாகவும் செயற்பட்டதுடன் தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் தம்மை ஈடுபடுத்தி வந்தார்.

அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர் நாட்டில் இருந்து வெளியேறி தமிழகத்திலும் பின்னர் லண்டனிலும் வசித்து வந்தார்.

மங்கையற்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார்.

இராமநாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர் பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கத்தை மணந்தார்.

அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையற்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை நின்ற மங்கையற்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.

இந்திய அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோருடன் மங்கையற்கரசி உறவுகளைப் பேணி வந்தார். காலஞ்சென்ற மங்கையற்கரசியின் இறுதிச் சடங்குகள் லண்டனில் எதிர்வரும் 20ம் தேதி நடைபெறும் என்று டாக்டர் பகீரதன் தெரிவித்தார்.

பகீரதன் தவிர மங்கையற்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.