மனிதநேயத்தை கட்டியெழுப்ப பிரார்த்திப்போம்

Ranil coltkn 01 06 rm 01174736994 4058482 06032016 arr cmy"மனித நேயத்தை கட்டியெழுப்பவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஓரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம்" என பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகம் முழுவதுமுள்ள இந்து பக்தர்கள் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று உதயமாகும் மகாசிவராத்திரி தினத்தை வெகுவிமர்சையாகக் அனுஷ்டிக்கின்றனர். இந்த இரவு சிவபெருமானின் விருப்பத்துக்குரிய இரவாகவும் கருதப்படுகிறது. இத்தினத்தில் தமது ஆன்மீகவாழ்வை ஒளியூட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் இந்து பக்தர்கள் இரவு முழுவதும் நித்திரையின்றி விரதம் அனுஷ்டிப்பதோடு, புண்ணிய கருமங்களிலும் ஈடுபடுவர்.

ஒளிரும் விளக்கு மூலம் இரவு ஒளியூட்டப்படுவது போன்று அறியாமை இருள் நீங்கி வாழ்க்கை குறித்த விளக்கம் கிடைக்கட்டும் என்று இந்த இரவில் அவர்கள் பிரார்த்திக்கின்றனர். சிவராத்திரியை அர்த்தமிக்கதாக கழிப்பதன் மூலம் விடுதலைக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்பது அவர்களது நம்பிக்கையாகும். சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்பு, பொறுமை, துணிச்சல், மானிட அன்பு அவசியம் என்பதில் சந்தேகமில்லை.

இன, மதபேதங்களை விதைத்து எமது நாட்டை இருளில் தள்ளுவதற்குப் பல்வேறு சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், மனிதநேயத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம். சகோதர இந்து மக்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் அர்த்தபூர்வமான மகாசிவராத்திரி தினமாக இத்தினம் அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.