இலவச அம்பியுலன்ஸ் சேவைகளை வழங்க எவரும் முன்வராததால் இந்தியாவுடன் ஒப்பந்தம்

dig1178703 01032016 kaaஇலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு வர்த்தகர்கள் யாராவது தயாராக இருந்தால் அவர்களை உடன் முன்வருமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை தனவந்த வர்த்தகர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே அரசாங்கம் இந்தியாவின் உதவியுடன் அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்கவிருப்பதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்தியாவுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் ஆரம்பிக்கப்படவிருக்கும் அம்பியூலன்ஸ் சேவைக்கான முழு உரிமையும் சுகாதார அமைச்சுக்கே உள்ளது. இதில் பணியாற்றுவதற்காக 600 இலங்கையர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதுடன், இச்சேவையை இவ்வருடத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கமுடியும் என்றும் அவர் கூறினார்.

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை வந்திருந்தபோது பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா 100 கோடி ரூபா உதவி வழங்கியுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் ஒருவருடத்துக்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகில் முதல்தர அம்பியூலன்ஸ் சேவையை வழங்கும் நிறுவனத்துடனேயே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வருட காலத்துக்கு குறித்த நிறுவனம் அம்பியூலன்ஸ் வண்டிகளையும், தொழில்நுட்ப உதவிகளையும் இலங்கைக்கு வழங்கும். ஒரு வருடத்தின் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசாங்கமும் மக்களும் தீர்மானிக்க முடியும்.

தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக 6 பேர் மாத்திரமேஇந்தியாவிலிருந்து இலங்கை வருவர்.இதற்கென 600 இலங்கையர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படும்.