போட்டித்தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்ல இலங்கை தயாராக உள்ளது.

President in Berlinபோட்டித்தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தில் முன்னோக்கிச் செல்ல இலங்கை தயாராக உள்ளமையால் அச்சமின்றி இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கை முதலீட்டு சபை மற்றும் ஜேர்மன் வர்த்தக கவுன்சில் ஆகியன ஏற்பாடு செய்த வர்த்தக மாநாடு நேற்று (18) பிற்பகல் ஜேர்மன் பேர்லின் நகரில் இடம்பெற்றதுடன் அங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

ஜேர்மனியின் சுமார் 250 முன்னணி வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், ஜனநாயகம் போன்றே சுதந்திரம் மற்றும் சமாதானம் என்பன உறுதி செய்யப்பட்டுள்ள இலங்கையில் இன்று முதலீடுகளுக்கு உகந்த சூழல் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவ்வாறே முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கும் அரசு தயாராக உள்ளதெனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த வாய்ப்பினை ஜேர்மன் வர்த்தகர்கள் பயன்படுத்துவதன் மூலம் இரண்டு நாடுகளும் நன்மை பெற முடியுமென தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்வதற்கு உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படும் தொழில்நுட்ப அறிவினை பெற்றுக்கொள்வதற்கு அரசு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையே சுமார் 700 மில்லியன் யூரோ வணிக கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுவதுடன், எதிர்வரும் ஒருசில ஆண்டுகளில் அதனை ஒரு பில்லியன் யூரோவாக அதிகரிப்பதற்கு இலக்கு வைத்துள்ளதாக இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மாநாட்டின் முடிவில் ஜேர்மன் வர்த்தகர்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், ஜேர்மன் வர்த்தகர்கள் மிக ஆர்வத்துடன் இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றி தகவல்களை கேட்டறிந்தனர்.

அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உப்புல் ஜயசூரிய ஆகியோர் இக்கலந்துரையாடலின்போது பதிலளித்தனர்.