புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு சந்தைவாய்ப்புகளை விரிவுப்படுத்திக் கொடுக்க விசேட நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

4 1புதிய கண்டுபிடிப்பாளர்களைப் பலப்படுத்தி அவர்களது கண்டுபிடிப்புகளுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுப்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு விசேட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

விருதுகளை வென்றவர்கள் அவர்களது திறமைகளினூடாக கண்டுபிடிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இன்று சந்தையில் எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன என்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, இக்கருத்திட்டங்களைப் பலப்படுத்துவதற்காக அரச கொள்கைகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரச வங்கிகளினூடாக அவர்களுக்கு கடன் வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, புதிய கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டுவதற்காகப் புதிய கண்டுபிடிப்பாளர் தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறும் இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

கண்டுபிடிப்பாளர்கள் தமது கண்டுபிடிப்புகளின் தரம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஒரு நாடு, தேசம் என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு நாம் எங்களுடைய உற்பத்திகளுக்கு உயர்ந்த பெறுமானத்தைக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டு கலாசாரங்களினூடாக எமக்குக் கிடைக்கும் எமக்குப் பொறுத்தமற்றவற்றை எடுத்துக்கொண்டு எமது உற்பத்திகளை ஒதுக்கும் யுகத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்நாட்டு புதிய கண்டுபிடிப்பாளர்களைப் பலப்படுத்துவதற்காக தொழில்நுட்ப, ஆராய்ச்சி அமைச்சின் ஆதரவுடன் இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவினால் இரண்டு வருடங்களுக்கொருமுறை இந்த விருது வழங்கும் நிகழ்வு ஒழுங்கு செய்யப்படுவதுடன், 2013,  2014 வருடங்களுக்கான சிறந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக இங்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புக்கான ஜனாதிபதி விருது ஏ.பி.எஸ்.லக்ஷ்மன் விஜேசிங்க அவர்களுக்கும் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது நிலான் சத்துரங்க லொக்குஹெட்டிகே அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்களின் ஆணைக்குழுவின் புதிய இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சின் செயலாளர் ஆர்.விஜேலட்சுமி, இலங்கை புதிய கண்டுபிடிப்பாளர்களின் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி மகேஷ் எதிரிசிங்க, பாணிப்பாளர் திணேஷ் சத்ரு கல்சிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

2 3 7 8 9 10