சர்வதேச பொறிமுறை அவசியமே இல்லை

colphoto 6150601130 4004970 08022016 sss cmyநாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு உள்ளக பொறிமுறை மூலம் தீர்வுகாண முடியுமென்றும் சர்வதேச பொறிமுறையொன்றிற்கான அவசியம் கிடையாதென்றும் கண்டி மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் இருவரும் ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ஹுசைனிடம் தெரிவித்தனர்.

தேசிய பொறிமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாடு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வீண் அழுத்தங்களைப் பிரயோகிக்காது ஐக்கிய நாடுகள் சபையானது அதற்குத் தேவையான ஒத்துழைப்பினை வழங்கினால் மட்டும் போதும் என்றும் மகாநாயக்க தேரர்கள் இருவரும் இதன் போது கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துக்குத் தலைமைத்துவம் வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தேசிய நல்லிணக்கத்தையும் மத ரீதியான நல்லுறவையும் நாட்டில் கட்டியெழுப்ப மக்கள் நம்பிக்கையை வென்றெடுத்துவரும் நிலையில் சர்வதேச பொறிமுறையொன்றின் அவசியம் கிடையாது என்றும் மகாநாயக்க தேரர்கள் இருவரும் தெரிவித்தனர்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்த் அல் ஹுசைன் நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையைத் தரிசித்த பின் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீட மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது மகாநாயக்க தேரர்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஐ. நா. ஆணையாளருக்குத் தெளிவுபடுத்தினர். இதன்போது, தற்போதைய அரசாங்கம் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

தம்மைக் கொலைசெய்ய முயற்சித்த முன்னாள் புலி உறுப்பினரைக் கூட மன்னிக்கும் அளவிற்கு ஜனாதிபதி கருணையுடன் செயற்படுகின்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் வடக்கு – கிழக்கு மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு கவனம் செலுத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி சந்தேக நபர்கள் ஒரு சாராருக்கு அண்மையில் விடுதலை வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஏனைய சிறைக் கைதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களை விசாரணை செய்வதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் பிரதமரும் ஜனாதிபதியும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக செயற்படுகின்றனர் என்ற நம்பிக்கையையும் மகாநாயக்கர்கள் வெளியிட்டுள்ளனர்.

மகாநாயக்க தேரர்களுக்குச் செவிமடுத்த ஐ. நா. ஆணையாளர் செய்த் ஹுசைன் கருத்துத் தெரிவிக்கையில்,

அடிப்படை வாதம் உலகெங்கிலும் விரிவடைந்துள்ள நிலையில் தேசிய மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உரியது. தலதா மாளிகையைத் தரிசித்தமையும் மகாநாயக்க தேரர்களின் ஆசீர்வாதமும் தமக்குக் கிடைத்த பெரும் பேறாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இன நல்லிணக்கத்தில் ஐ. நா. தமது விசேட கவனத்தை செலுத்தி வருவதாகவும் இலங்கை ஐ. நா. வின் அங்கத்துவ நாடு என்ற வகையில் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐ. நா. தமது ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

மனித உரிமை ஆணையாளர் என்ற வகையில் தமக்கு பெரும் பொறுப்பு உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய அவர் இலங்கை விஜயத்தின் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.