ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான இலங்கையின் புதிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பு – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்

Presidential Media Unit Common Banner 1எல்லா மக்கள் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைத்த விசேட பிரகடனம் இந்திய அரசாங்கத்தின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் தெரிவித்தார்.

இன்று (06) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் இந்திய அரசாங்கமும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பெரிதும் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் செயற்பாடுகளுக்கு இந்தியாவிடமிருந்து கிடைக்கும் உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, இந்த தீர்க்ககரமான சந்தர்ப்பத்தில் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கும் பொருளாதார முன்மொழிவு முறைமைகளுக்கும் இந்திய அரசாங்கம் வழங்கிவரும் விரிந்த ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தியாவும் இலங்கையும் நீண்டகால நட்புநாடுகளாகும் என்றும் அந்த வகையிலேயே தாம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அது தொடர்பில் தனது நன்றிகளைத் தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்தியாவின் கொள்கை அயல்நாடுகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதாகும் என்றும் அயல்நாடுகளுக்கிடையே இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவது இந்தியாவின் நிலைப்பாடாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்து – லங்கா இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது கடந்த காலங்களில் விடுபட்டிருந்த பொறுப்புகள் தொடர்பில் வந்துள்ள தீர்மானங்களுக்கு நன்றிதெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர், தொழிநுட்ப ஒத்துழைப்புகள் தொடர்பில் புதிய உடன்பாடுகளையும் அதன்போது அடைந்து கொள்வதற்கு முடியுமாய் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மலையக மக்களின் சுகாதாரம், கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விரிவான நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதற்கு இணக்கம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கல்வி, மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளுக்காக ஐடெக் (ITECH)  உடன்பாட்டின் கீழ் உதவுவதாகவும் உறுதியளித்தார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசியல்யாப்பு சீர்திருத்தம் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்தும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி இதன்போது இந்திய வெளியுறவு அமைச்ருக்கு விளக்கிக்கூறினார்.

இந்த நிகழ்வில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி ஜயசங்கர் மற்றும் உயரிஸ்தானிகர் வை கே சிங்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்