'சிங்ஹ லே' அமைப்பை கட்டுப்படுத்த வேண்டும்

pause 8Fதுவேசத்தை விதைத்து மக்கள் மத்தியில் இன மத ரீதியிலான பிரிவுகளை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் "சிங்ஹ லே" வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌஸி தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கணேஷமூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். ஸூஹைர், மேலதிகச் செயலாளர் ஜே. ஏ. கே. ஜயதுங்க ஆகியோர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையைப் பேராரயர் இல்லத்தில் கடந்த வெள்ளியன்று மாலையில் சந்தித்து கலந்துரையாடினர். அச்சமயமே கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் பௌஸி தலைமையில் அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துக் கலந்தரையாடினர். அதனடிப்படையிலேயெ இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சமயம் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டாவது, நாட்டில் இன நல்லிணக்கத்தையும் தேசிய ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்துவதற்காக அனைத்து பாடசாலைகளிலும் மூன்று மொழிகளிலும் கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை முன்பள்ளி கல்வி நடவடிக்கை முதல் ஆரம்பிப்பது அவசியம். ஒரு மொழி பிரதான கற்கை மொழியாக இருக்கின்ற போதிலும் ஏனைய இரு மொழிகளதும் கற்பித்தல் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

அப்போது தான் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக எமது எதிர்கால சந்ததியினரைக் கட்டியெழுப்ப முடியும் இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தான் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு விஷேட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்.

அதேநேரம் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் சமரசத்தையும் கட்டியெழுப்பி புதிய நாட்டை உருவாக்குவதற்காக ஒவ்வொரு அரசாங்க நிறுவனத்திலும் இரு மொழித் தேர்ச்சி பெற்றவர்களைக் கடமையில் ஈடுபடுத்த வேண்டும்.

குறிப்பாக பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் இதனைச் செய்வது மிகமிக அவசியமானது.

அதேவேளை “சிங்ஹ லே“ என்பது பிரிவினைக் கோஷம். இது மக்களை இன மத ரீதியாக மக்களைப் பிரித்து விடுவதற்கான முயற்சியாகும். இது இனங்களுக்கிடையில் துஷேத்தை ஏற்டுத்தக் கூடியது இதனை நோக்கும் போது 1950 களின் பிற்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ எதிர்ப்பு இயக்கத்தையே நினைவுக்கு கொண்டு வருகின்றது. அதனால் சிஙஹ லேவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேவேளை மக்களை ஒன்றிணைப்பதற்காக எல்லா மதத் தலைவர்களும் பாரியளவு பங்களிப்புக்களை நல்க முடியும்.

அதற்காக எல்லா மதத் தலைவர்களும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும். நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். என்றாலும் அதனை இப்போதாவது ஆரம்பித்து முன்கொண்டு செல்ல வெண்டும்.

எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாப்பரசர் பிரான்ஸிஸ் ஆண்டகையை சந்தித்த போது. ஆயுத உற்பத்தி கலாசாரம் உலகில் இருப்பதால் யுத்தங்களும் தொடர்ந்தும் இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆயுதங்களை உற்பத்தி செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் தான் யுத்தங்களை உருவாக்குகின்றனர். அவர்கள் நாடுகளில் இருக்கும் சிறு விடயங்களை பெரிதாக்கி வேறுபாடுகளை வளர்க்கவும் செய்கின்றனர்.

மொசாட் இந்நாட்டு படைகளுக்கு பயிற்சி அளித்த அதேநேரத்தில் இரண்டு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் எல். ரி. ரி. ஈ யினருக்கு பயிற்சி அளித்தனர். இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரமதாச ஆணைக்குழுவொன்றைக் கூட நியமித்து விசாரணை நடாத்தினார்.

யுத்தம் காரணமாக நாம் அனுபவித்த துன்ப துயரங்கள், இழப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் இது தேவையற்ற யுத்தம்.

இந்த நாட்டைப் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றவும் மக்கள் மத்தியில் அமைதியையும் சந்தோஷத்தையும் உருவாக்கிடவென இனத் துவேஷ ரீதியிலான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் சரித்திரத்திலிருந்தே அகற்றிவிட வேண்டும் என்றும் கூறினார்.