வடக்கில் இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வாக முதலீட்டு வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் – ஜனாதிபதி

President6 7வடக்கு இளைஞர் யுவதிகளின் பிரச்சினையாகவுள்ள தொழில் பிரச்சினைக்குத் தீர்வாக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவியுடன் பல புதிய முதலீட்டு வாய்ப்புகளை எதிர்காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கிலும் தெற்கிலும் எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் காண்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு மக்களுக்கும் அபிவிருத்தியின் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்து அம்மக்களின் சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹைத்ரமணி ஆடைத் தொழிற்சாலையை இன்று (24) முற்பகல் திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

மனிதர்களின் வாழ்வை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு மணல், செங்கல் மற்றும் சீமெந்தினால் மட்டும் முடியாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, எப்போதும் மக்களின் உள்ளங்களை இணைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிக்காது எல்லா மக்களினதும் தேவைகளை நிறைவேற்றி அவர்கள் மத்தியில் சமாதானம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆடைத் தொழிற்சாலையைத் திறந்துவைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். பிரதேசத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் அவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அந்த எல்லா பிரச்சினைகளுக்கும் உடனடியான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதேபோன்று யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல்போன தங்களது உறவினர்களை தேடித்தருமாறும் சிறைகளில் உள்ள தமது உறவினர்களை விடுவிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்தனர். இந்த எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் ஜனாதிபதி அவர்களை படுகொலைசெய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து அண்மையில் ஜனாதிபதி அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னால் எல்ரீரீஈ. உறுப்பினர் சிவராஜா ஜெனீவனின் பெற்றோரும் ஜனாதிபதியைச் சந்தித்து ஜனாதிபதிக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அதுரலியே ரத்ன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், இந்து மற்றும் கத்தோலிக்க சமயங்களின் மதகுருமார்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அமைச்சர் ரிசாத் பதுர்தீன், வடமாகாண ஆளுநர் ஏ.எம்.பீ.எஸ் பலிகக்கார பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா, முதலீட்டுச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய, வெளிநாட்டுத் தூதுவர்கள், இராணுவத்தளபதி, கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் மற்றும் ஹைத்ரமணி நிறுவனத்தின் தலைவர் ஜகத் ஹைத்ரமணி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2

3

4

6

7

9

12

15

17

18

1

3