மீறினால் அரசுக்கு எதிராகவும் போராட்டம்

govarmantவடக்கில் காணிகளை எதிர்வரும் ஜனவரியில் விடுவித்து தருவதாக ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் முன்னெடுத்த அதே போராட்டத்தை இந்த அரசாங்கத்திலும் முன்னெடுக்க நாம் தயங்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு காணியுடன் காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்த காணிகளில் தமது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிக்க முடியுமாயுள்ள போதே அந்த மக்களால் காணியை பெற்றுக் கொண்டதற்கான முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளாலேயே இந்த அரசாங்கம் பதவியேற்றது.

எனவே ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமென்றும் மாவை எம்.பி. வலியுறுத்தினார்.

வரவு - செலவு திட்டத்தின் காணி, மகாவலி அபிவிருத்தி, சற்றாடல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவதும் குடியேற்றப்படுவதும் பாரதூரமான பிரச்சினையான போதும் நாம் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. என்ற போதும் தமிழ், முஸ்லிம் மக்கள் வீடு, காணியின்றி தமது வாழ்வாதாரங்களை தொலைத்து நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் அந்த காணிகளை ஆக்கிரமித்து விடுதிகளை கட்டி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமார் 02 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து 11 அகதி முகாம்களிலும் நண்பகர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சுமார் 25 வருடங்களாக இவர்கள் தமது சொந்த மண்ணில் குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தால் தான் அம்மக்கள் தமது சொந்த காணிகளில் குடியேறி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடிமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் இராணுவத்தினரை குவித்து இராணுவ மயமாக்கி, பின்னர் சிங்கள மயமாக்கி, பெளத்த விகாரைகளை அமைப்பதே மஹிந்த சிந்தனையின் கோட்பாடாக இருந்தது. இதற்கு எதிராக நாம் போராடியதன் விளைவாகவே ஜனவரி 08ம் திகதி புதிய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவினோம். சிறுபான்மையினரின் தேவை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் நாம் போராட பின்வாங்க மாட்டோமென்றும் அவர் கூறினார்.

சிறைக் கைதிகளை விடுவிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்ற பொதுவான கருத்து இருந்து வருகிறது.

எனவே, கால இழுத்தடிப்பை மேற்கொள்ளாது சட்டமா அதிபர் திணைக்களம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.