பொதுத் தேர்தலின் பின் பேரம் பேசும் சக்தியுடன் தமிழர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்

n 444பொதுத் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் எனக் கூறினார்.

திருகோணமலை மாவட்டம் சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட் பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்த இக்கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சம்பந்தன்;

நாம் அதிகப்படியான ஆசனங்களான 20 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை நாம் 2016ம் ஆண்டு 6ம் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்ய தயாராகவுள்ளோம்.

தமிbழ விடுதலைப் புலிகள் ஆயுத பலத்தை பார்த்து இலங்கை அரசாங்கம் எம்மை பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததுடன் பலதீர்வுகளை முன்வைத்தனர். எனினும் கடந்த காலங் களில் கிடைத்த சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுள்ளோம். அந்த இராணுவ பலத்தை நாம் ஜனநாயக ரீதியில் அரசியல் பலமாகக் காட்டவேண்டிய தருணம் தற்பொழுது தோன்றியுள்ளது.

இந்த அரசாங்கத்திடம் நாம் மிகவும் நிதானமாக நடந்து கொள்கின்றோம். தற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிபால சிறிசேனவை நான் நீண்ட காலம் அறிவேன். 1994 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியொன்றைக் கொண்டுவந்தபோது அவருக்குப் பக்க பலமாக இருந்தவர். தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

கடந்த அரசாங்கத்துடன் நடத்திய இரண்டு பேச்சுவார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. ஒன்று தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு பேசியது. இரண்டாவது 13வது அரசியல் சாசனத்தில் மாற்றத்தை கொண்டுவர அமைச்சரவை உதவியுடன் மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்தபோது நடைபெற்ற பேச்சுவார்த்தை. இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.

அப்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் என்பதாலும் அதிகப்படியான சிங்கள மக்களின் ஆதரவை கொண்ட ஒரு தலைவர் என்பதனாலும் அன்றும் அவர் முன்னிலை படுத்தப்பட்டார். ஆயினும், அவர் துவேஷமாக எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை. மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார். எனவே, இந்த ஆட்சியும் அமையவுள்ள ஆட்சியும் நமக்கு சாதகமான பல சந்தர்ப்பங்களை கொண்டுள்ளது. இதனை நாம் மிக சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வேட்பாளர்களான க. கனகசிங்கம், .ஜீவருபன், சரா.புவனேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மூதூர் தொகுதிக்கிளை தலைவர் திருச்செல்வம் மற்றும் சேருவில் தொகுதி தலைவர் சுந்தரலிங்கம், வெருகல் பிரதேச சபை முன்னாள் தலைவர் விஜயகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.