இணைந்தா? தனித்தா? சிறுபான்மை கட்சிகள் விரைவில் முடிவு

பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா? தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சிறு மற்றும் சிறுபா¡ன்மை கட்சிகள் மும்முரமாக ஆராய்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதோடு ஜே. வி. பி. ஜனசெத பெரமுன என்பனவும் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளன.

இம்முறை பொதுபல சேனாவும் தேர்தலில் குதிக்க தீர்மானித்துள்ளது. இது குறித்து பொதுபல சேனா நேற்று அறிவித்துள்ளதோடு கட்சிச்சின்னமாக நாக பாம்பை பயன்படுத்த ஆணையாளரின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் ஐ.தே.க. வுடன் இணைந்து போட்டியிடுவதா? தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் கூறின, இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் அதி உயர்பீடம் 2ஆம் திகதி தாருஸ்ஸலாமில் கூட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐ. தே. க.வுடன் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனநாயகக்கட்சி தனித்துப் போட்டியிடும் என நீர்கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் கட்சித்தலைவர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறியவருகிறது. இது தொடர்பில் ஆராய 6ஆம் திகதி முக்கிய கூட்டமொன்று நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் தாம் ஐ. ம. சு. மு வில் இணைந்து போட்டியிடுவதா? அல்லது மாற்று முடிவொன்றை எடுப்பதா என ஆராய்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தனியாக போட்டியிடத் தீர்மானித்தால் அதில்இணைவதா என்பது குறித்தும் இடதுசாரி கட்சிகளிடையே மாற்றுக் கருத்துக் காணப்படுவதாகத் தெரியவருகிறது.

மலையகக் கட்சிகள் மற்றும்மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி என்பன ஐ.தே.க. வுடன்இணைந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அறிய வருகிறது. அண்மையில் அமைக்கப்பட்ட தமிழ் முற்போக்கு முன்னணியில் தனித்து போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையையும்சில தரப்பினர் முன்மவைத்துள்ளதாக கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இ.தொ.கா. கடந்த தடவை ஐ. ம. சு.மு வில் இணைந்து போட்டியிட்டது. இம்முறை ஐ. ம. சு.முவில் மீண்டும் இணைந்து போட்டியிடுவதா? தனித்துப் அல்லது ஐ. தே. க.வுடன் கூட்டச் சேர்வதா? என தீர்மானிக்க முடியாத நிலையில் இ.தொ.கா. உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

வேட்புமனுக்கள் எதிர்வரும் 3ஆம்திகதி முதல் ஏற்கப்பட உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் ஏற்பாடுளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஐ.ம.சு.மு. விற்குள் மஹிந்த அணி, மைத்திரி அணி என இரு குழுக்கள் செயற்பட்டுவரும் நிலையில் சகலரையும் ஒன்றிணைத்து ஒன்றாகப் போட்டியிட

முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த முயற்சிகள் தோல்வி யடைந்தால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலானகுழு தனித்துப் போட்டியிடும்எனக் கூறப்படுகிறது.