ஜனாதிபதி மைத்திரியைவிடவும் மஹிந்தவுக்கு நவீன பாதுகாப்பு

குண்டு துளைக்காத பென்ஸ்கார்கள் : 165 பொலிஸார் : 104 பாதுகாப்புப் படையினர்

தேர்தலில் குதித்தால் மேலும் அதிகரிப்பு

RANIL ndk 4 150pxமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியைவிட்டு செல்கையில் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள், வாகனங்கள் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் ஜனாதிபதி அதனைவிட குறைந்த தரத்திலான உபகரணங்களையே பயன்படுத்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகையை தவிர வேறு எந்த வாசஸ்தலத்தையும் மஹிந்தவுக்கு வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், தேர்தல் காலத்தில் வேட்பாளராக களமிறங்கிய பின்னர் அவருக்கு மேலும் பாதுகாப்பு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் தினேஷ் குணவர்த்தன எம்.பி முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர்,

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 105 பொலிஸாரும் 104 பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த அதிக பாதுகாப்புள்ள பென்ஸ் காரும் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். டீ.பி.விஜேதுங்க பயன்படுத்திய வீட்டை திருத்தி வருகிறோம். அவருக்கு வேறு வீடு தேவை எனின் பெற்றுக்கொடுக்க முடியும். ஜனாதிபதி உரித்து சட்டம் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு என்பவற்றின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு இரு உத்தியோகபூர்வ வீடுகளும் ஒரு பாதுகாப்பு வீடும் உரித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான

சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அதனை விட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த ராஜபக்ஷவுக்கு 3 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கலாக 105 பொலிஸாரும் கேணல் ஒருவர் அடங்கலாக 14 அதிகாரிகளும் மற்றும் 90 வீரர்களும் வழங்கப்பட்டுள்ளனர். இராணுவ பாதுகாப்பிற்காக சகல வாகனங்களும் அளிக்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு தேவை எனின் டிரக் அல்லது பஸ் வண்டியொன்றை மேலதிகமாக வழங்க முடியும். முன்னாள் ஜனாதிபதிக்கு இரு பென்ஸ் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று குண்டு துளைக்காத பென்ஸ் காராகும். இதுவே இலங்கையில் உள்ள சிறந்த பாதுகாப்புடன் கூடிய பென்ஸ் காராகும். இதனைவிட குண்டு துளைக்காத பீ.எம்.டபிள்யூ ஜீப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டிபென்ட்டர் வாகனம், டபிள் கப் வாகனம் மற்றும் லான்குரூசர் ரக வாகனங்களும் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கோ எனக்கோ வழங்கப்பட் டதைவிட மிகச்சிறந்த வாகனங்களை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளோம். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியதைவிட பழைய வாகனத்தையே ஜனாதிபதி பயன்படுத்துகிறார். என்னிடம் அதைவிட பழைய வாகனமே உள்ளன. மஹிந்தவின் வாகனங்களுக்கு போதிய எரிபொருளும் வழங்கப்படுகிறது.

எக்ஸ்ரே இயந்திரம், மிதிவெடி கண்டுபிடிக்கும் இயந்திரம் என்பனவும் அவருக்கு வழங்க இருக்கின்றோம். இலங்கையில் உள்ள ஒரே ஒரு அதி பாதுகாப்பு இயந்திரத்தையும் அவருக்கு வழங்கியிருந்தோம். அவர் எடுத்துச்சென்ற சில இயந்திரங்களை நாம் மீளப்பெற வில்லை. ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு கூட அவ்வாறான உபகரணங்கள் கிடையாது.

கடந்த ஆட்சியில் கே.பி க்கும் பாது காப்பு வழங்கப்பட்டது. அந்த பாதுகாப்பை நாம் அகற்றவில்லை. அவ்வாறு அகற்றினால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட தினேஷ் குணவர்த்தன தனக்கு துரிதமாக உத்தியோகபூர்வ இல்லம் கிடைப்பதை மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார் என்றார். இதற்குப் பதிலளித்த பிரதமர், ஜனாதிபதி இல்லத்தை கேட்காவிட்டால் பரவாயில்லை. ஜனாதிபதியுடன் பேசி உத்தியோகபூர்வ இல்லம் வழங்க முடியும். தேர்தல் காலத்தில் வேட்பாளர் என்ற ரீதியில் தேவைப்பட்டால் அவருக்கு மேலும் பாதுகாப்பு வழங்க முடியும் என்றும் கூறினார்.