தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பெயர் பட்டியல் இவ்வருடம் மீளாய்வு

எல். ரி. ரி.ஈ உருவாவதை சித்தரிக்க கடந்த அரசு அவசர அவசரமாக பட்டியல் தயாரிப்பு

ForeignMinister1aதடை செய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ.யினர் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

 ஜனாதிபதி தேர்தல் வருவதை அறிந்து மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீண்டும் உயிர் பெறுவதாக சித்தரிக்கும் வகையில் அவசர அவசரமாக இந்த தடைப் பட்டியலை தயாரித்திருந்தார்.

இதில் சுமார் 05 அல்லது 06 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை மீள உறுதி செய்யும் நோக்கில் தடைப்பட்டியலை மீளாய்வு செய்யும் வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்கம் களமிறங்கியிருப்பதாகவும் அமைச்சர் சமரவீர கூறினார்.

இலங்கையில் நடை பெறவுள்ள புலம் பெயர்ந்தோருக்கான விழாவில் (Diaspora Festival) தடைப்பட்டியலிலுள்ள வெளிநாடுகளில் வாழும் எல்.ரீ.ரீ.ஈ.யினரும் கொள்வார் களாவென அமைச்சர் சமரவீரவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கை யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.

புலம் பெயர்ந்து வாழும் இலங்கை யர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைப்பதே இந்த விழாவின் நோக்கமாகும்.

எனினும் தடை செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருக்கும் அனைவரும் தீவிரவாதிகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்தவர்களின் பெயர்களும் அந்த பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரசியல் நோக்கிலேயே இந்த தடைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் மீளாய்வுக்குட்படுத்தி வருகின்றோம். அதற்கமைய உண்மையான தீவிரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, நாம் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுடனும் பேச்சு நடத்துகின்றோம். இதன்படி பிரிவினைவாதம் இல்லாத ஒன்றிணைந்த இலங்கையை உருவாக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

புலம் பெயர் வாழ் இலங்கையர்களுடன் அரசாங்கம் பேச்சு நடத்த வேண்டுமென்பதே மஹிந்த ராஜபக்ஷவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய கொள்கையாகும். அவர் செய்ய தவறியதை நாம் செய்கிறோம். முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தனது அறிக்கையை வாசிக்க தவறிவிட்டமைக்காக நான் வருந்துகிறேன் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான 10 நாள் பயிற்சி நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்தேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்வின் இறுதியில் தினகரன் ஊடகவியலாளரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிளக்கையிலேயே மேற் கண்டவாறு கூறினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புலம் பெயர்ந்தோருக்கான விழாவை நடத்தப்போவதாக என்னால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இலங் கைக்குள் மீண்டும் ஈழமொன்றை உருவாக்க முயற்சிப்பதாகவும் இதற்காக ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலிருந்து மூன்றரை மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றிருப்பதாகவும் ஊடகங்களில் வெளிவந்திருக்கும் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை. இது எனது யோசனை மாத்திரமேயாகும். இதன் பின்புலத்தில் வேறு எவருமோ அல்லது எந்தவொரு அழுத்தமோ இல்லை.

அயர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் வருடாந்தம் நடத்தப்படுகின்றது. இதை இலங்கையிலும் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது.

‘டயஸ்போரா’ என்பது புலம் பெயர் வாழ் மக்களாகும். இதில் தமிழர், சிங் களவர், முஸ்லிம்கள், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.

பலர் டயஸ்போரா என்றதும் வேற்று உலகிலிருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்களைப் போன்றே அவர்களை கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் இலங்கையைச் சேர்ந்த திறமையாளிகள் உள்ளனர். ‘நாசா’வில் மாத்திரம் 10 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் உள்ளனர். பிரபல வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், சமையற்காரர்கள் என அனைத்து துறையிலும் இலங்கையர்கள் வெளிநாடுகளில் பிரகாசித்து வருகின்றனர்.

இவர்களது அறிவு, அனுபவம், திறமையிலிருந்து நாம் பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலீடுகளுக்காக நாம் வெளிநாட்டவர்கள் பின்னால் செல்கிறோம். எதற்காக நாம் இலங்கையர்களின் முதலீடுகளை வர வேற்கக்கூடாது. இவர்களது அனுபவம் எமக்கு தேவையாகும்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய பயணத்தில் புலம் பெயர்வாழ் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தமிழ் மற்றும் சிங்கள அடிப்படை வாதங்கள் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவையாகும் என்றும் தெரிவித்தார்.