தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகள்

வீதி நிர்மாணம் உட்பட நிலுவையாகவுள்ள திட்டங்களை நிறைவு செய்வதில் கூடிய கவனம்

nnn2தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், நாட்டைப் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.

பாதை நிர்மாணம் உட்பட நிலுவையாய் உள்ள திட்டங்களை நிறைவு செய்வதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் என அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக்கொண்ட பிரதமர், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தல் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் இங்கு வலியுறுத்தினார்.

நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திலும் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, கபீர் ஹாசிம், ஜோசப் மைக்கல் பெரேரா உட்பட திறைசேரி மற்றும் அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,

நூறுநாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிந்ததையிட்டு அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தற்காலிகமாக நிதி குறைபாடாக இருந்த சில பிரதேசங்களுக்கு அபிவிருத்திக்கான நிதியினைப் பெற்றுக்கொடுக்க நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எமது அரசாங்கம் மேற்கொண்டது போன்ற நூறுநாள் வேலைத்திட்டத்தை வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுத்ததில்லை.

இங்கிலாந்தில் ஐக்கிய இராச்சிய அரசாங்கம் கடந்த மே மாதத்தில் தெரிவு செய்யப்பட்டு தற்போதுதான் வரவு செலவுத் திட்டத்தை அறிவித்துள்ளது. அதேபோன்று நாமும் செயற்பட்டு வருகிறோம். எம்மால் முதல் இரண்டு வருடத்தில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.

கடந்த தேர்தல் காலத்தில் நிதியில்லாத நிலையிலும் அன்றைய அரசாங்கம் பல வீதி நிர்மாணத் திட்டங்களை ஆரம்பித்தது.

100 நாள் திட்டத்தின் போது சில சமயம் எமக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. எனினும் கடந்த அரசு நாடளாவிய ரீதியில் 28 வீதிகளை நிர்மாணிக்கவென தேசிய சேமிப்பு வங்கியில் 5500 கோடி ரூபாவைப் பெற்று அதில் 2800 கோடி ரூபா நிதியை வேறு தேவைகளுக்காக உபயோகப்படுத்தியதையும் குறிப்பிட வேண்டும். எவ்வாறாயினும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல பாதைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீதமுள்ள செயற்திட்டங்களை நடைமுறை ப்படுத்துவதற்கு நிதி வழங்குவதற்காகவே மாவட்டச் செயலாளர்களை அமைத்து கலந்துரையாடுகின்றோம்.

தற்போது பெற்றுக்கொள்ளும் நிதியில் புதிய வீதிகளன்றி ஏற்கனவே நிறைவு செய்யப்படாமலுள்ள வீதிகளையே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஏனையவை 2017 இல் நிறைவு செய்யப்படும்.

அரசாங்கம் கிராமிய பாதைகளுக்கே முன்னுரிமையளிக்கவுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாம் பெருமளவு நிதியை நிர்மாணப் பணிகளுக்காகச் செலவிட்டுள்ளோம்.

வீதிகளை நிர்மாணிக்கும் அதேவேளை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

கல்வியில் குறைபாடு நிலவுவதே நாட்டில் பெருமளவு சர்வதேச பாடசாலைகள் உருவாகக் காரணமாகியுள்ளது. இதனால் கல்வித்துறையை மேம்படுத்தி சிறந்த கல்வியை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவை வழங்க நாம் நிதியினைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். இனி அது முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

நெல் கொள்வனவுக்கு சிறந்த முறையையொன்றை நாம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. சிறுபோகம், பெரும் போகம் என நெல் கொள்வனவு செயற்திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமாகும். இது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடியுள்ளோம்.

பிரதேச மாவட்டச் செயலாளர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் இவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கிராமங்களைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அவர்களுடையது.

கல்வி, சுகாதாரம், கிராமிய அபிவிருத்தி, நகர அபிவிருத்தி என இவற்றுக்கென மத்திய மற்றும் நீண்டகால செயற்திட்டங்களை முன்னெடுக்கவே நாம் உத்தேசித்துள்ளோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். (ஸ)