குற்றவாளிகளுக்கு உச்சதண்டனை

யாழ்ப்பாணத்தில் வித்தியாவின் தாயிடம் ஜனாதிபதி அறிவிப்பு

President 12யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்பு பட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் மூலம் உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இனி ஒருபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.

 ஜனாதிபதி தனது விஜயத்தின் போது வடபகுதி பாடசாலை மாணவர்களை சந்தித்தார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 17 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.

அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இவற்றில் சில பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார்.

உட்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு மைதானங்களை நிர்மாணித்தல் ஆசிரியர்கள் பற்றாக்குறை, போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பில் இங்கு மாணவர்களால் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

எழுத்து மூலமாகவும் பல பிரச்சினைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன். தனியான அதிகாரியொருவரை நியமித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

யாழ் குடா நாட்டில் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் போதைப் பொருள் பாவனை தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனைக் கவனத்திற்கொண்ட ஜனாதிபதி பாதுகாப்புப் படையினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதா பங்களையும் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரை யாடல்களை மேற்கொண்டார்.

அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவ தாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.

வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார். யாழ். விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் யாழ். நாக விஹாரைக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

விஹாராதி பதியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி விஹாரையின் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஷ்வரன், பிரதியமைச்சர் விஜய கலா மகேஸ்வரன் ஆகியோரும் ஜனாதி பதியுடன் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டனர். (ஸ)