தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் காலம் கனிந்துவிட்டது

ஜனாதிபதி மீது கூட்டமைப்புக்கு திடமான நம்பிக்கை

ஜனாதிபதி மீது கூட்டமைப்புக்கு திடமான நம்பிக்கை

மஹிந்த தமிழ் சமூகத்தை ஏமாற்றவே முயன்றார்

R Sampathanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தாம் அவற்றிற்கு இடமளிக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு - வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் சனிக்கிழமை (09.05.2015) மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராசசிங்கத்தை பாராட்டுமுகமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாலிப்போடி சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, சீ. யோகேஸ்வரன், பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜ சிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரட்ணம், ஞா. கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சி இளைஞர் அணித்தலைவர் கி. சேயோன், செங்கலடி மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் வ. கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாங்கள் ஒருபோதும் நாட்டினை பிரிக்கும்படி கேட்கவில்லை. இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என்றுகூட நாங்கள் கேட்கவில்லை. ஆனால் 1933 இல் டொனமூர் இலங்கைக்கு விஜயம் செய்த போது மலைநாட்டுப் பகுதியைச் சேர்ந்த கண்டிய தலைவர்கள் அவருக்கு முன்னால் நின்று இந்த நாட்டிலே ஒரே மக்கள் வாழ வில்லை. வெவ்வேறு இணங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். ஆகவே இந்த மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் ஒரு சமஷ்டி ஆட்சி நடைபெற வேண்டும் என கேட்டார்கள்.

இதேபோன்று இந்த நாட்டிலே கண்டிய சிங்கள மக்கள், கீழ் நாட்டுச் சிங்கள மக்கள், வட கிழக்கிலே தமிழர்கள் என வெவ்வேறான மூன்று இனங்கள் வாழ்கின்றன. சமஷ்டியின் அடிப்படையில் மூன்று இணங்களுக்கும் தாங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் போதிய அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என கேட்டார்கள்.

1972 ஆம் ஆண்டு அரசியல் சாசனம் பாராளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்ட போது ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்க வேண்டுமென தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம் ஊடாக கேட்டார். கணிசமான அளவு அதிகாரப் பகிர்வுடன் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார்கள். அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் நிமிர்த்தம் 1976 ஆம் தந்தை செல்வா வட்டுக்கோட்டையில் தமிbழ பிரகடனத்தைச் செய்வதற்கு சம்மதித்தார்.

சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. அது கைகூட வில்லை. அப்போது, தமிழ் மக்கள் சார்பில் தமிbழ விடுதலைப் புலிகள் பாரிய சக்தியாக இருந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய கருத்தை மீறி எதையும் செய்வது ஒரு கடினமான விடயம். அவர்களும் ஓர் அரசியல் தீர்வுக்கு வரச் சம்மதம் என்று கூறிய பின்பும் அரசியல் தீர்வு ஏற்படவில்லை. ரணில் பிரதமராக இருந்த காலத்தில் ஒஸ்லோ பிரகடனம் கொண்டுவரப்பட்டு தமிழ் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு சமஷ்டி முறையிலான தீர்வு ஒருமித்த நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவு அரசாங்கத்தினாலும் தமிbழ விடுதலைப் புலிகளினாலும் முன்வைக்கப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதியும் 13வது திருத்தச் சட்டத்தை திருத்த வேண்டும். அதனடிப்படையில் அதற்கு மேலதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகார பகிர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு தெரிவுக்குழுக்கள் மற்றும் நிபுணர் குழுக்களை நியமித்து பல்வேறு அறிக்கைகள் மற்றும் சிபாரிசுகள் செய்திருக்கின்றார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒரு நாட்டுக்குள் ஒற்றை ஆட்சியுடன் ஒரு தீர்வை காணுவதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் அவர் அதற்கு சம்மதமாக இருக்கவில்லை. எங்களை ஏமாற்றுவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு நாங்கள் இடமளிக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எங்களை பங்கெடுக்கச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளுக்கும் நாங்கள் இடமளிக்கவில்லை.

மக்களின் ஜனநாயக முடிவின் ஊடாக தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தியதன் அடிப்படையில் நாட்டில் தற்போது பாரிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் மக்களுடைய ஜனநாயக சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஓர் அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அது நியாயமான அதிகாரத்தைத் தரவேண்டும். சுயாட்சியைத் தரவேண்டும். எமது பொருளாதார சமூக, கலாசார, அரசியல் தேவைகளை நாங்கள் நிறைவேற்றக்கூடிய வகையில் தீர்வு அமைய வேண்டும். ஒரு நாட்டில் பிரச்சினை தொடர்கதைகளாக இருக்க முடியாது. ஒருகால கட்டத்தில் முடிவு வரவேண்டும். எம்மைப் பொறுத்தவரை முடிவு வரவேண்டிய காலம் வந்துவிட்டது.

சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்மையைப் பேசுபவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொறுத்தவரை யில் எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையை சிங்கள மக்கள் மத்தியில் அவர் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார்