சொந்தக்கிராமம் எனும் உரிமையை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது இந்த அரசு

தலவாக்கலையில் பிரதமர் உரை

WICKREMESINGHEவரலாற்றில் தமது சொந்த கிராமம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் உரிமையை மலையக மக்களுக்கு தமது அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

லயன் அறைகளுக்குப் பதிலாக புதிய லயன் அறைகளையன்றி தனி வீடுகளை யமைத்து கிராமங்களில் வாழும் சூழலையும் உரிமையையும் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின் நுவரெலியா மாவட்டம் பாரிய அபிவிருத்திக்கு உள்ளாக்கப்படும் என்றும் பெருந்தோட்ட கைத்தொழில் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஐம்பதாண்டு நிறைவு விழாவும் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான ‘பசுமை பூமி’ காணி உறுதிப்பத்திரம் வழங்கும் வைபவமும் நேற்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்கள் பி. திகாம்பரம், ரவூப் ஹக்கீம், அர்ஜுன ரணதுங்க, வீ. இராதாகிருஷ்ணன், கே. வேலாயுதம், ஊவா மாகாண சபை அமைச்சர் வடிவேல் சுரேஷ், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

தொழிலாளர் தேசிய சங்கம் அதன் 50 வது நிறைவைக் கொண்டாடும் வேளையில் நேரில் வருகை தந்து வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடை கின்றேன்.

பல தலைவர்கள் இக்கட்சிக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய போதும் அமைச்சர் திகாம்பரத்தின் தலைமைத்துவத்தில் கட்சி புத்தெழுச்சி பெற்றுள்ளதைக் குறிப்பிட வேண்டும்.

அமைச்சர் திகாம்பரம் மலையக பெருந்தோட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர். அவர்களின் உரிமைக்காக உழைப்பவர். கடந்த ஜானதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்காக அவர் பேரம் பேசினார். மலையக மக்களுக்கான தனி வீடு மற்றும் அவர்களுக்கு சம உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை இப்போது நிறைவேற்றப்படுகிறது.

எமது அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு அம்சமாகவே மலையக பெருந்தோட்ட மக்களுக்குச் சொந்த வீடு காணி உறுதிப் பத்திரத்துடன் வழங்கப்படுகின்றது.

இதன் மூஸ்ரீல வரலாற்றில் முதற் தடவையாக காணி உறுதிப் பத்திரம் மலையக மக்களுக்கும் வழங்கப்படுகின்றது. அமைச்சர் திகாம்பரத்தின் முயற்சிக்குக் கிடைத்த பெரும் வெற்றியாக இதனைக் கருத முடியும். இந்தக் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை 1994 ஆம் ஆண்டில் வழங்குவதற்கு நாம் முயற்சி எடுத்த போதும் அது பயனளிக்கவில்லை. தற்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் நான் பிரதமராகவும் பதவி வகிக்கும் போது அமைச்சர் திகாம்பரத்தால் அதைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நான் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடமும் ராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதத்திடமும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். மலையக மக்களுக்கான காணிகளை பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அதன்பின் அமைச்சர் திகாம்பரம் அக்காணிகளில் மலையக மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்.

இதற்கான முதற்கட்ட நிதியினை அரசாங்கம் வழங்கியுள்ளது.

எமது அரசாங்கம் பழைய லயன் காம்பிராக்களுக்குப் பதிலாக புதிய லயன் காம்பிராக்களை வழங்கவில்லை. மாறாக புதிய தனி வீடுகளை வழங்குகிறது. மக்களை இதன் மூலம் சமூகமயப் படுத்துவதே எமது நோக்கமாகும்.

மலையக மக்களுக்கென கிராமங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அவர்கள் தமக்கும் ஒரு கிராமம் உள்ளது என இனி உரிமையுடன் கூறு முடியும்

இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமக்கு ஒரு (ஊர்) கிராமம் இருப்பதாக பெருமையுடன் கூறமுடியும் பிரேமச்சந்திரவுக்கும் சொந்த ஊர் தமக்குள்ளதாக உரிமை கொண்டாடி பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். எனினும் தோட்டப்புற மக்களுக்கு தமது சொந்த ஊர் அல்லது கிராமம் என சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத நிலையே இருந்தது. இப்போது நாம் அந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

நாம் மலையக மக்களுக்கு சேவை செய்வதற்காக மூன்று அமைச்சர்களை நியமித்துள்ளோம். அமைச்சர் பி. திகாம்பரம், ராஜாங்க அமைச்சர்கள் கே. வேலாயுதம் மற்றும் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் அதனை நிறைவேற்றி வருகின்றனர்.

மலையகப் பிரதேசங்களில் தமிழ் மொழி மூலமான 25 பாடசாலைகளை முழுமையாக அபிவிருத்தி செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். பதுளை, நுவரெலியா. மாத்தளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பத்தையும் கற்பிக்கும் வகையில் அமையவுள்ள இப்பாடசாலைகளின் அபிவிருதி நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாகும். மலையகத்திலும் கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷனை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் ரோசி சேனநாயக்காவின் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகிறது. விளையாட்டு அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாம் 100 நாட்களில் இந்தளவு செய்யும் போது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 10 வருடமாக என்ன செய்தது என நான் கேட்க விரும்புகிறேன். எதுவுமே செய்யவில்லை. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்தளவு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை மக்கள் உணர வேண்டும்.

எமது அரசாங்கம் நாட்டின் சாதாரண மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கே சேவை செய்வோம். அடுத்த பொதுத் தேர்தலின் பின் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும்.

கைத்தொழில் பேட்டைகள், உல்லாசப் பிரயாண நிறுவனங்கள், பால் பண்ணைகள் ஆகியன இதிலடங்கும்.

மலையகத்தில் கிராமங்களை ஏற்படுத்தி அருகருகில் நகரங்களையும் உருவாக்கி முன்னேற்றமடையாத தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதே எமது நோக்கமாகும். கினிகத்ஹேன மற்றும் கொத்மலை போன்று ஏனைய பிரதேசங்களும் முன்னேற்றப்படும்.

தொழிலாளர் வர்க்கத்தினருக்காகவே எமது அரசாங்கம் செயற்படும். நாம் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுத் தேர்தலின் பின்னர் பெருந்தோட்டக் கைத்தொழில் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம்.

ராஜபக்ஷமார்கள் செல்வந்தர்களுக்காகவே செயற்பட்டன. வீதிகள் அமைத்து கொமிசன் பெற்றதும் அவர்களே. எனினும் எமது அரசு தொழிலாளர்களின் பக்கமே நின்று செயற்படும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.