எதிர்க்கட்சியின் செயற்பாடு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரண்

திறைசேரி உண்டியல்களை வழங்கி அரசாங்கம் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி ஆட்சேபம் தெரிவிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரினால் தெரிவிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக வாக்களித்தமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக எடுக்கப்பட்ட செயற்பாடு என்று சபை முதல்வரும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசாங்கம் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதற்கு பதிலாக வேறு உபாயங்கள் மூலம் பணத்தை திரட்டிக் கொள்ள முடியுமென்றும் குறைந்த வட்டியில் பணத்தைப் பெற முடியுமென்ற காரணத்திற்காகவே இவ்விதம் செயற்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திறைசேரி உண்டியல்களை வெளியிட்டு அரசாங்கம் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்க்கட்சி ஆதரவு வழங்குமென்று அதன் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார். அவ்வாறே, நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் திறைசேரி உண்டியல்கள் வெளியிடுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தார். அதன் பின்னரே திறைசேரி உண்டியல் வெளியிட்டு பணத்தைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரும், தினேஷ் குணவர்தனவும் இவ்விதம் இரு வகையான கருத்துக்களுடன் செயற்படுவதால் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தானது முழு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சார்பாக நிகழ்த்தப்பட்ட உரையாகும். எனினும் எதிர்க்கட்சியில் உள்ள சிலர் இதற்கு எதிராக வாக்களித்து திறைசேரி உண்டியல் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வெற்றி எதிர்க்கட்சியின் தற்காலிக வெற்றியாகவே கொள்ள முடியும். ஆனால், அரசாங்கத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அரசாங்கம் வேறு மார்க்கமாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். வாக்கெடுப்பு ஒரு மணித்தியாலயத்துக்கு முன்னர் நான் ஜோன் செனவிரத்னவிடம் ஒரு கடிதத் துண்டொன்றை அனுப்பினேன். அதில் அவர் நாங்கள் வாக்கெடுப்புக்கு செல்ல மாட்டோம் என்றும் வாக்கெடுப்பு தேவையில்லை என்றும் தெரிவித் திருந்தார்.

ஆகவே, எதிர்க்கட்சி உண்டியல் வழங்க ஆட்சேபனை இல்லையென்று தெரிவித்துவிட்டு அதற்கு மாற்றமாக செயற்படுவது பாராளுமன்ற சம்பிரதாயங் களுக்கு முரணான எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அரசாங்கம் குறைந்த வட்டியில் பணத்தை பெற்றுக் கொள்வதற்காகவே திறைசேரி உண்டியல்களை வெளி யிடுகிறது.

நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காகவே இந்தப் பணம் பயன்படுத்தப்பட உள்ளது. பணம் பெற்றுக்கொள்வதற்கு பல வழிகள் காணப்பட்டாலும் குறைந்த வட்டியில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்விதம் உண்டியல்களை வெளியிடுகிறது. கடந்த அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும், கொந்தராத்துக் காரர்களுக்கு பணம் செலுத்துவதற்குமே திறைசேரி உண்டியல்களை வழங்கி பணம் பெறப்பட இருந்தது.

அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை நிறுத்துவதாக கூறும் எதிர்க்கட்சியினர் அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் வழங்கி பணம் பெறுவதை நிறுத்தியதன் மூலம் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினரே தடையாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.