உண்மையான நல்லிணக்கமே எமது இலக்கு

தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஊக்குவிப்போம்

சந்திரிகா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் உருவாக்கம்

WICKREMESINGHEநாட்டில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீள உருவாகு வதற்கு இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். பத்திரிகை ஆசிரியர்கள் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

இந்த தலைமையகத்தின் முக்கிய பணி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் பிரதிநிதி ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும் மற்றும் சில துறைசார் அனுபவம் பெற்ற அதிகாரிகளும் இந்தத் தலைமையகத்தின் கீழ் செயற்படுவார்கள்.

திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ள இந்தத் தலைமையகத்தின் முழுமையான செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் ஒன்றுபட வேண்டும். வேறுபாடுகள் இருக்கக் கூடாது. இனம், மதம் பாலியல் வேறுபாடுகள் உட்பட சகல வேறுபாடுகளும் களையப்பட்டு நாட்டில் புரிந்துணர்வுடன் கூடிய புதிய கலாசாரத்தை ஏற்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் இலக்கு எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

தேசிய கீதம்

தேசிய கீதம் தொடர்பில் வீணான பிரச்சினையொன்று உருவாக்கப்பட்டுள்ள தெனக் கூறிய அவர், நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டு வருகிறது. இதனை ஒரு பிரச்சினையாக உருவாக்கி, ஐக்கியத்துக்குப் பங்கம் ஏற்படுத்த வேண்டாம் எனவும் பிரதமர் ரணில் கேட்டுக்கொண்டதோடு தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு ஊக்குவிக்கப்படு மென்றும் கூறினார்.

நல்லிணக்க செயற்பாடுகளில் தென்னாபிரிக்காவின் மாதிரியை பின்பற்றுவீர்களா? என எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதமர் “இந்த விடயத்தில் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாட்டை நாம் ஆராய் கிறோம். எதுவென்றாலும் அது இலங்கைக்கு ஏற்ப முன்னெடுக்கப்படும்.

எமது மக்கள், எமது கலாசாரம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டே நமது நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். இந்த நாட்டு மக்கள் வேறுபட்டு நிற்காது ஒன்றுபட வேண்டும் என்பது எமது இலக்கு. அந்த இலக்கை நல்லாட்சி அரசு அடையும் எனவும் பிரதமர் கூறினார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சார்டட் வங்கியின் கட்டிடத்திலேயே இந்த செயலணியின் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.