ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தவே அமைச்சுப் பொறுப்புக்கள் ஏற்பு

அரசின் தவறுகளை தொடர்ந்தும் விமர்சிப்போம்

 19வது திருத்தத்தை திருத்தங்களுடன் ஏற்போம்

T1ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்தி அரசியலமைப்பை திருத்தவும் தேர்தல் முறையை மாற்றவுமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்களில் ஒரு பகுதியினர் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர். இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்தின் தவறுகளை விமர்சிக்கவும் எதிர்க்கட்சியின் பொறுப்பை நேர்த்தியாக முன்னெடுக்கவும் இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

19ஆவது திருத்த சட்ட நகலிலுள்ள சில திருத்தங்களை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதும் தேர்தல் திருத்தம் ஒன்றாக இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையக த்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரை யாற்றிய அவர், எந்த சலுகையும் எதிர்ப ¡ர்த்து சு. க. உறுப்பினர்கள் அரசில் இணைய வில்லை. அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திலுள்ள நாட்டுக்கு முக்கியமான வாக்குறுதிகளை நிறை வேற்றுவதற்காகவே ஒரு பகுதியினர் அரசில் இணைந்துள்ளனர். கட்சியின் அனுமதியுடனே இது இடம்பெற்றது என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஐ. தே. க.வுடனன்றி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் வாக்குறுதிகளை நிறைவேற்றவே தேசிய அரசாங்கத்தில் கைகோர்த்துள்ளோம். இதற்கு முன் கரு ஜெயசூரிய அடங்கலான 17 ஐ. தே. க. எம்.பி.க்கள் ஐ. ம. சு. முவில் இணைந்தனர். இது புதிய விடயமல்ல. இது ஐ. தே. க.வும் சு. க. வும் இணை வதல்ல. அரசில் ஒரு பகுதியினர் சேர்ந் தாலும் எமது தனித்துவத்துடனே செயற்படுவோம். எதிர்க் கட்சியினராக ஏனையவர்கள் தமது பங்கை மேற்கொள்வர்.

யாப்பு திருத்தம் குறித்து அமைச்சரவையில் எமது நிலைப்பாட்டை முன்வைக்கவும் தேர்தல் திருத்தத்தை முன்னெடுக்க அழுத்தம் வழங்கவும் எமது சு. க. அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இன்றேல் ஐ. தே. கவுக்கு சார்பாகவே முடிவுகள் எடுக்கப்படும்.

நீண்ட காலத்திற்கன்றி தேசிய முக்கி யத்துவமான தேவைகளை நிறைவேற்றவே இவ்வாறு கையோர்த்துள்ளோம்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் நாம் ஏற்கெனவே உடன்பட்ட சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இருந்தாலும் இதிலுள்ள அநேக திருத்தங்களை சு. க. ஏற்கிறது. தேவையான வேறு திருத்தங்களை தேர்தலின் பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை தலைவர் பிரதமர் என புதிய திருத்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியே அமைச்சரவை தலைவராக இருக்க வேண்டும். இந்த திருத்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படும் என நம்புகிறோம்.

பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை மாற்றுதல் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடமாக குறைத்தல் ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய இடமளித்தல் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை மாற்றுதல் என்பவற்றுக்கும் எமது கட்சி உடன்படுகிறது.

நாம் அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. திருத்தங்களுக்கு உட்பட்டதாக 19 ஆவது திருத்தத்திற்கு நாம் ஆதரவு வழங்க தயார்.

தேர்தல் முறையை மாற்றி கலப்பு தேர்தல் முறையை அறுமுகப்படுத்த இதனோடு நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த தேர்தல் புதிய முறையின் கீழே நடைபெற வேண்டும்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பது போன்று தேர்தல் முறை மாற்றத்திற்கு ஐ. தே. க. நடவடிக்கை எடுக்காவிட்டால் எமது கட்சி அமைச்சர்களினால் அது தொடர்பான சட்ட மூலத்தை அமைச் சரவையில் முன்வைக்க முடியும். மக்களின் எதிர்பார்ப்புகளில் தேர்தல் முறை மறுசீரமைப்பு பிரதானமாகும்.

100 நாள் திட்டத்திலுள்ள அம்சங்களை நிறைவேற்ற 200 நாள் கூட பிடிக்கலாம். அதில் குறிப்பிட்ட விடயங்கள் அதிலுள்ள அதே திகதிகளில் நடைபெறவில்லை. தேர்தல் முறையை மாற்றிய மறுதினமே தேர்தல் நடத்தலாம் என்றார். கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது,

அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறை மாற்றம் என்பன தொடர்பில் பிரதான கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டது. தேர்தலை ஒத்திவைப்பதற்காக தேர்தல் முறை மாற்றத்திற்கு நாம் முயற்சி செய்யவில்லை. கட்சி மத்திய குழுவின் அனுமதியுடனே எமது கட்சி எம்.பிக்கள் அமைச்சு பதவி ஏற்றனர். இது அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதல்ல. கட்சியில் முக்கிய பதவி வகிப்பவர்கள் அமைச்சு பதவி ஏற்கவில்லை. பிரதான நோக்கங்களை நிறைவேற்றவே சு. க. உறுப்பினர்கள் அரசில் இணைந்தனர் என்றார்.