ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்துவதற்காகவே இக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

 

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்தே ஐரோப்பிய ஒன்றியம் 2010ம் ஆண்டு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கு தடை விதித்தது.

இதன்படி இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற 300 வகையான ஆடை தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினாலும், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களினாலும், மீண்டும் இவ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.