தமிழ் கைதிகளின் விடுதலை பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் சரியான விபரங்கள் சட்டமா திணைக்களத்திடம் ஒப்படைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னேற்றகரமான பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இருந்த தெளிவின்மையை சட்ட மா அதிபர் திணைக்களம் சரி செய்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்களுக்கு கையளிக்கப் பட வேண்டிய காணியை ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை தெரிவதாகவும் அதற்கான பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் விழாவில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்.

கடந்த காலங்களில் தமிழ் ஊடகவிய லாளர்கள் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப் பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியு மாகவுள்ளது. இது உண்மையான சுதந் zதிரமா என்பதை இன்னும் சில காலங்களில் நாம் உணர முடியும். பயம் தெளிந்து நாம் சுதந்திரமாக செயற்பட முடியும் என்ற நிலையும் துணிவும் ஊடகவியலாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

தமிழ் மக்களுடைய காணிகள் தொடர்பில் அரசாங்க தரப்புடன் விசேட பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றது. தாமதங்கள் தொடர்பில் நாம் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றோம். இதன் பிரதிபலனாக வட பகுதியில் 6386 ஏக்கர் காணியில் 1100 ஏக்கரை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மூன்று தடவைகள் இந்த அறிவிப்பு வகுக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 232 ஏக்கர் காணி கடந்த வாரம் மக்களுக்கு கையளிக்கப் பட்டுள்ளது. இன்னும் 200 ஏக்கர் காணி எதிர்வரும் 23 ஆம் திகதி விடுவிக்கப் படவுள்ளது. மிகுதியை ஒரு மாத காலத்தில் விடுவிப்பதாக கூறப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாகவாவது இந்தக் காணிகள் மக்களுக்குக் கிடைப்பது ஓரளவு மகிழ்ச்சி தருகிறது.

இதேவேளை அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஒரு முக்கிய குழுக் கூட்டம் இடம்பெற்றது. முதலில் அக் குழு பிரதமருக்கு சமர்ப்பித்த அறிக்கையின் படி 38 பேரே விடுவிக்க ப்படவுள்ளதாக அந்த பட்டியலில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. எனினும் மூன்று வருடங்களுக்கு முன் நாம் தயாரித்த பட்டியலின் படி 245 பேர் இருக்க வேண்டும். நேற்று சம்பந்தப்பட்ட சகல தரப்புகளின் ஆவணங்களோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் அந்த எண்ணிக்கை சரியாக இருந்தது.

இதன்படி எமது எண்ணிக்கை சரியாக இருந்தது. நாம் அடுத்த முறை சந்திக்கும் போது இவர்களில் ஒவ்வொருவரினதும் நிலை, விபரம் என்ன என்பது பற்றி பேசுவோம், வழக்குத் தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்யப்படாதவர்கள் பற்றியும் பேசுவோம். எந்தவிதமான குற்றச் சாட்டுக்களும் இல்லாதோரை விடுதலை செய்யவும் கோரவுள்ளோம். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்