இலங்கை வருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் - ஐரோப்பிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் பின் ராட் எதிர்வரும் ஜூனில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் இலங்கை தொடர்பில் புதிய நோக்கத்துக்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கையின் படையினர் ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் வகிக்கப்போகும் பங்கிலும் செல்வாக்கு செலுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

படையினரில் சிலர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இலங்கையின் முழு படையினரின் நன்மதிப்புக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உள்ளூர்மட்ட பொறிமுறையின் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க முயற்சிக்கிறது.

இந்த உள்ளுர் முயற்சிகள் தோல்வி கண்டமை காரணமாகவே சர்வதேச தலையீட்டுடன் சர்வதேச விசாரணைகள் முன்னெடு;க்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் சர்வதேச தரத்தில் பேணப்பட வேண்டுமே தவிர மேற்கத்தைய நாடுகளின் தரத்துக்கு ஏற்ப பேணப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய பிரதிநிதிகள் அடுத்த வாரம் இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலர் அடுத்த வாரம் இலங்கை வருகின்றனர்.

ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பொருட்டே இவர்கள் இலங்கை வருவதாக, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டேவிட் டல்லேயை மேற்கோள் காட்டி வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை கைத்தொழில், வர்த்தக அமைச்சுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.