20 ஆவது திருத்தத்தின் பின் பாராளுமன்றம் கலைப்பு

விகிதாசார முறையிலேயே பொதுத் தேர்தல்

kabir hashimஅரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் கபீர் ஹாசிம், தற்போதைய விகிதாசார தேர்தல் முறையிலேயே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

மக்களின் ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவரினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை கலைத்துவிட்டு மீண்டுமொரு மக்கள் ஆணையின் மூலம் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் கபீர் ஹாசிம் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது. எனினும், 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் சற்று காலதாமதம் ஏற்பட்டதால் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கமுடியாமல் போனது.

அவ்வாறே, தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென்ற வாக்குறுதியை நாம் மக்களிடம் தெரிவித்திருந்தோம். சகல கட்சிகளின் ஆதரவுடனேயே புதிய தேர்தல் முறையை கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே 20ஆவது திருத்தமாக புதிய தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

எனினும், சகல கட்சிகளும் ஏதேனும் ஒரு தேர்தல் முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டால்

அதனடிப்படையில் தேர்தலை நடத்தலாம். ஆனால், கட்சிகளிடையே வேறுபட்ட கருத்துக்கள் காணப்படும் போது தேர்தலை நடத்துவதில் சிக்கல் உருவாகலாம். இதற்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டு பழைய தேர்தல் முறையிலேயே தேர்தல் நடத்தப்படும். ஆனால், 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறையின் மூலம் தேர்தல் நடத்தப்படலாம்.

அடுத்தவாரமளவில் 20ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. அதன் பின்னர் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், புதிய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

கட்சிகளிடையே பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. எல்லைநிர்ணயம் செய்யப்பட வேண்டியுள்ளது.

அவ்வாறே, புதிய தேர்தல் பொறி முறையை அறிமுகப்படுத்த வேண்டி யுள்ளது. இந்நிலையில் புதிய தேர்தல் முறையில் நடத்துவதில் சிக்கல் தோன்று வதால், தற்போதைய தேர்தல் முறை யிலாவது பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்.

ஐக்கிய தேசியக்கட்சி உட்பட இந்நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்திய சகல கட்சிகளும் பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சிறுபான்மை கட்சிகளும் தேர்தலை விரைவில் நடத்த வேண்டு மென்பதில் ஆர்வமாக உள்ளன.

மேதினத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் மக்கள் சக்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சக்தியானது சிறுபான்மை கட்சி என்பதை மாற்றியமைத்து நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஆதரவு உள்ள கட்சி என்பதை காட்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.