19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்

நாளை பிற்பகல் வாக்கெடுப்பு

அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

ஸ்ரீல. சு. க., ஐ. ம. சு. முவின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு 19ஆவது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 19 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது, 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் ஐ. ம. சு. முவில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் இதனை எதிர்க்கப் போவதாகத் தெரிய வருகிறது.

பாராளுமன்றத்தில் ஐ. ம. சு. மு.வுக்கு 144 பேரும், ஐ. தே. க. வுக்கு 60 பேரும், த. தே. கூட்டமைப்புக்கு 14 பேரும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 பேரும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்றும் நாளையும் விவாதம் நடத்தப்பட்டு நாளை 28 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட் டிருக்கிறது.