19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை

மக்களின் இறைமை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறது

சட்டமா அதிபர் நேற்று உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு

முன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறை மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை சட்டமா அதிபர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்து வதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை யென்றும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக 17 மனுக்களும், 5 இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க மற்றும் நீதியரசர் ப்ரியசாத் டெப் ஆகியோர் தலைமையில் கடந்த வியாழக் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ப்பட்டது.

அரசியலமைப்பை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கையில் உத்தேச திருத்தச்ச ட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப் பதற்கான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அரசியலமைப்பின் ஆரம்பத்தில் உள்ள கட்டமைப்பை மாற்றும் வகையில் இது அமைந்திருக்கவில்லை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட் டுள்ளார்.

திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றம்செய்யும்போது அரசியலமைப்பின் 83வது சரத்து மீறப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு

சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியலமைப்பின் மூன்றாவது மற்றும் நான்காவது சரத்துக்கள் தொடர்பிலேயே கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். இந்த சரத்துக்கள் நாட்டு மக்களின் இறைமை தொடர்பானவை. எனினும், உத்தேச திருத்தச்சட்டமூலம் மக்களின் இறைமையை பலவீனமடையச் செய்யும் வகையில் அமையவில்லை. மாறாக அதனை கடைப்பிடிக்கும் முறையிலேயே மாற்றங்கள் பிரேரிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்தார்.

பிரதமரின் ஆலோசனையுடனேயே ஜனாதிபதி சில தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற விடயம் தொடர்பில் குறிப்பிட்ட சட்டமா அதிபர், உத்தேசிக் கப்பட்டிருக்கும் இந்த யோசனையானது ஆரோக்கியமான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கான சமநிலைகளைப் பேணும் வகையில் அமைந்துள்ளது என்றார். ஜனாதிபதியும், பிரதமரும் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்கள். அதேநேரம், ஜனாதிபதி நிறைவேற்றுத் தலைவராக நீடிப்பார் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பின் 42(5) சரத்துக்கு அமைய அமைச்சரவையின் தலைவராக சட்டமா அதிபர் காணப்படுவார். பிரதமர் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும்போது ஜனாதிபதியும் அதில் பங்கெடுப்பார் என்றும் சட்டமா அதிபர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரிப்பது மாத்திரமே அரசியலமைப் பில் மக்களுக்கு வழங்கப்பட்டிருக் கும் இறைமையை மீறும் வகையில் அமையும். ஆனால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறைப்பதானது அரசியலமைப்பின் 30(2) சரத்தின் கீழ் மக்களின் இறைமையை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ் வாறான சூழ்நிலையில் குறித்த திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டிய தேவை இல்லை.

நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதி பயன்படுத்துவதையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான நிலையில் பிரதமர் எடுக்கும் தீர்மானங்களைக் கண்காணிப்பதற்கு பொறிமுறையொன்று அவசியம் என பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்தார்.

மூன்று நாட்களாக மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்து உச்சநீதிமன்றம் தனது தீர்மானத்தை காலதாமதமின்றி பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கவுள்ளது.