19 ஆவது திருத்தம் 21, 22இல் விவாதம்

அரசு, எதிர்க்கட்சிகள் இணக்கம் சர்வ கட்சிக்கூட்டத்தில் தீர்மானம்

Parliament19ஆவது திருத்தச் சட்ட வரைபு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை நாளை 21ஆம் திகதியும் மறுநாள் 22ஆம் திகதியும் நடத்துவதென்று அரசாங்கம் உட்பட எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் நேற்று அரசியற் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இணக்கம் காணப்பட்டது.

இது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கையில், 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற சிபாரிசுகளுக்கு ஏற்ப சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தொடர்பாக அங்கு விவாதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் குழு நிலை விவாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களைக் கொண்ட ஆவணத்தை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு இந்த பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்பிரகாரம் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடி நாளை வரை ஒத்திவைக்கப்பட உள்ளது. அந்தக் காலப்பகுதியில் 19ஆவது அரசிலமைப்பு திருத்தத்துக்கான ஆவணங்கள் முழுமையாக தயார்படுத்தப்பட்டு உறுப்பினர்களுக்கு அறிவூட்டப்பட்ட பின்னர் நாளை 21, ம் திகதியும் மறுநாள் 22ஆம் திகதியும் அது தொடர்பாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.