மஹிந்த, குடும்பத்தாருக்கு 18 பில்லியன் சொத்துக்கள்

வெளிநாடுகளில் பதுக்கி வைப்பு

4 நாடுகளின் உதவியுடன் முடக்கும் நடவடிக்கை

Mangala Samaraweeraமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் 2.2 ட்ரில்லியன் டொலர் (18பில்லியன் டொலர்) சொத்துக்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நான்கு நாடுகளின் உதவியுடன் இந்தச் சொத்துக்களை முடக்குவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிட்டகோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையின் அரச சொத்துக்களை கொள்ளை யடித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் பிரதமராக வேண்டுமென ஆசைப்படுகிறார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அரசியலில் ஈடுபட வாய்ப்புகளை வழங்கக் கூடாது.

ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் அரச சொத்துக்களை கொள்ளையடித்து பல பரம்பரையினர் வாழும் அளவுக்கு வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை எண்களில் தெரிவிக்க முடியாத அளவில் காணப்படுகின்றது.

எனினும் சர்வதேச நாடுகளின் உதவியுடன் விசேட பொறிமுறையொன்றின் ஊடாக இந்தச் சொத்துக்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் நான்கின் உதவியுடன் நடைபெற உள்ள இந்த தேடுதல்களில் ராஜபக்ஷ மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு 2.2 ட்ரில்லியன் (18 பில்லியன்) டொலர் சொத்துக்கள் காணப்படலாம் என்று புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இத்தொகையானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நான்கில் ஒரு மடங்காகும். இலங்கையில் மொத்த தேசிய உற்பத்தி 72 பில்லியனாக காணப்படுகிறது. அவ்வாறே, உழைக்கும் வர்க்கத்தினரின் ஊழியர் சேமலாப நிதியைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். மொத்தமாக இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியம் 1.4 ட்ரில்லியன் காணப்படுகின்றது. ஆனால் இதனைவிட இரண்டு மடங்கு அதிகமான சொத்துக்கள் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு காணப்படுகிறது.

இவ்விதம் கொள்ளையடித்துவிட்டு வெட்கம் இல்லாமல் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற ஆசைப்படும் மஹிந்த ராஜபக்ஷ தமக்கு எதிரான ஊழல், மோசடிகளை மறைப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்கு வருகை தர ஆசைப்படுகிறார்.

ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளை பிளவு படுத்தியது மாத்திரமல்லாமல், நாட்டில் ஜனநாயகத்துக்கு விரோதமான செயலிலும் ஈடுபட்டார். அவ்வாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரிக்கவும் சூழ்ச்சிகளை செய்தார். தற்போது சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் வேலையில் இறங் கியுள்ளார்.

இவ்விதம் சர்வதேச நாடுகளில் மறக்க முடியாத தலைவராக இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, உலக தலைவர்களில் களவு, மோசடிகளில் ஈடுபட்ட மாபெரும் தலைவராக தடம்பதித்துள்ளார். அவர் மாத்திரமின்றி அவருடைய பாரியார், மகன்மார், சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் அரச சொத்துக்களை கொள்ளையடித்துள்ளார்கள்.

இவர்கள் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை இலகுவில் அடையாளம் காண முடியாது. இந்தச் சொத்துக்கள் அவர்களின் சொந்தப் பெயரில் காணப்படுவதில்லை.

அவ்வாறே வேறு பெயர்களில் பல் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றனர். மிகவும் தந்திரமான முறையில் சேமித்து வைத்திருப்பதால் அவற்றை இலகுவில் அடையாளம் காண முடியாது.

இதற்காகவே நான்கு நாடுகளின் உதவியுடன் இந்த சொத்துக்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரு வதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன.

அவ்வாறே, அந்நாடுகளின் தொழில்நுட்ப உதவியும் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.