வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
வட மாகாணத்தில் 9 ஆசனங்களும், கிழக்கு மாகாணத்தில் ஐந்து ஆசனங்களும் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் ஐந்து உறுப்பினர்களும். முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 4 ஆசனங்களும் மட்டக்களப்பில் 3 ஆசனங்களும். திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தலா ஒரு ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுககொண்டது.
இம்முறை தேர்தலில் 20 ஆசனங்களைக் கைப்பற்றுவது என்ற இலக்குடன் களமிங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்ற முடிந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் போட்டியாகக் கருதப்பட்ட குமார் பொன்னம்பலம் தலைமையில் போட்டியிட்ட அகில இங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் வித்யாதரன் தலைமையில் சுயேச்சைக் குழுவின் சார்பில் போட்டியிட்ட ஜனநாயக போராளிகள் கட்சி என்பன படுதோல்வியடைந்தன.
யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 207,577 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் போட்டியாகக் கருதப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 15,022 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. அதேநேரம் சுயேச்சைக்குழுவில் போட்டியிட்ட ஜனநாயக போராளிகள் கட்சி வெறுமனே 1979 வாக்குகளையே பெற்றுள்ளது.
யாழ் குடாநாட்டின் சனத்தொகைக்கு அமைய குடாநாட்டில் எம்.பிக்கள் எண்ணிக்கை 7 ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. 7 ஆசனங்களில் 5 ஆசனங்கள் கூட்டமைப் பால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், ஈ. பி. டி. பி. மற்றும் ஐ. தே. க. ஆகிய கட்சிகளுக்கும் யாழ் மாவட்டத்தில் தலா ஒவ்வொரு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
அதேநேரம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார். முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கிளல் கூட்டமைப்புக்கு 4 ஆசனங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலை விட இம்முறை ஒரு ஆசனம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 89,886 வாக்குகள் கிடைத்துள்ளன. அதேநேரம் ஐ. தே. க.வுக்கு 39,513 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 20,965 வாக்குகளும், தலா ஒவ்வொரு ஆசனங்களும் அவற்றுக்குக் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்புக்கு மூன்று ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன. 2010 ஆம் ஆண்டும் கிழக்கு மாகாணத்தில் இதேயளவு ஆசனங்களையே கூட்டமைப்பு பெற்றிருந்தது.
இம்முறை 20 ஆசனங்களைப் பெறுவதை இலக்காகக் கொண்டு கூட்டமைப்பு பிரசாரங்களை முன்னெடுத்திருந்து. யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் சிவஞானம் சிறிதரன் (72,058 வாக்குகள்), மாவை சேனாதிராஜா (58,732 வாக்குகள்), சுமந்திரன் (58,043 வாக்குகள்), சித்தார்த்தன் (53,743 வாக்குகள்), ஈ. சரவணபவன் (43,223 வாக்குகள்) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியடைந் துள்ளார். அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களுக்குப் பதிலாக புதியவர்கள் தெரிவாகியுள்ளனர்.