கொழும்பில் 12 கட்சிகளின் மேதினக் கூட்டங்கள், ஊர்வலங்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 12 கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ஹைபார்க் மைதானத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, ஜே. வி. பி.யின் மே தினக் கூட்டம் பி. ஆர். சி. மைதானத்திலும், தினேஷ் குணவர்த்தன தலைமையிலான கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் கிருலப்பனை லலித் அத்துலத் முதலி விளையாட்டு மைதானத்தில் மே தினத்தை நடாத்துகின்றன. இவற்றோடு இணைந்ததாக கட்சிகள் மற்றும் அமைப்புகள், தொழிற் சங்கங்களின் 15 மே தினக் கூட்டங்களும் மே தின ஊர்வலங்களும் கொழும்பில் நடைபெறவுள்ளன.

ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் இணைந்த மே தின ஊர்வலம் மூன்று பகுதிகளிலிருந்து பிரதான விழா மைதானத்தை வந்தடையவுள்ளன. கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கிற்கு முன்பாகவும் கண் ஆஸ்பத்திரி சுற்றுவட்டத்திலிருந்தும் மருதானை காமினி தியேட்டர் சுற்றுவட்டத்திலிருந்தும் ஊர்வலங்கள் ஆரம்பமாகவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலம் கொழும்பு நகர மண்டப சுற்று வட்டத்திலிருந்து ஆரம்பமாகும் ஜே. வி. பி. யின் மேதின ஊர்வலம் மஹரகம ஜெயசிங்க மண்டப சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. தத்தமது மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கட்சிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் திருமலையிலும் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் ஹட்டன். தலவாக்கலை பகுதிகளிலும் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதியாகவும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் நடைபெறும் முதலாவது மே தினம் இது என்பதும் குறிப்பிடத் தக்கது.