ரூ. 10,000 அடிப்படை சம்பளத்துடன் -பிரதமர் உறுதி

pm ranil Dec15அரசாங்க ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட ரூபா 10,000 கொடுப்பனவை எதிர்வரும் வருடம் முதல், வருடந்தாம் ரூபா 2,000 வீதம் அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (14) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் இன்றைய தினம் (14) விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது எனத் தெரிவித்த பிரதமர், புதிதாக அரசாங்க நியமனம் பெறுவோருக்கு, புதிய முறையிலான ஓய்வூதிய முறைமை ஒன்றை உருவாக்கப்படும் ஆயினும் ஓய்வூதிய திட்டம் நீக்கப்படமாட்டாது என உறுதியளித்தார்.

அத்துடன், தனியார் ஊழியர்களுக்கு ரூபா 2,500 சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கான சட்டமூலமொன்றை எதிர்வரும் 2016 மே மாதம் அளவில், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன் வாகன புகை பரிசோதனைக்காக, வரவு செலவுத்திட்டத்தில் விதிக்கப்பட்ட ரூபா 5,000 இனை குறைப்பது தொடர்பில் ஆலோசனை செய்வதாக தெரிவித்த பிரதமர், அது தொடர்பில் திருத்தம் மேற்கொள்ளும்பட்சத்தில் நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், குறித்த வாகன புகைபரிசோதனைக்கான கட்டணத்தில் சலுகை செய்யும் வரை, அதற்கான இடைக்கால கட்டணமாக ரூபா 1,500 இனை விதிக்க அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், வாகன அனுமதிப்பத்திரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டண அதிகரிப்பை 10% ஆல் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.